இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 100% விமான சேவை:உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி தீவிர கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கப்பட்டன.
பின்னர் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் இயங்கின. அதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் தொடங்கப்பட்டன. அப்போது தினமும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக பன்னாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றுடன் கூடிய 3-வது அலையின் தீவிரமும் அடங்கிய நிலையில் கரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு விமான சேவைகளையும் முழுமையாக இயக்கி கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.
இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தாண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட்ட பன்னாட்டு விமான சேவைகள் ஓரிரு வாரங்களில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சகஜநிலைக்கு திரும்பி 100% விமான சேவை இயக்கப்பட்டன.
எதிர்பார்க்கப்பட்ட ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம்:சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ.2,500 கோடி செலவில் ஒருங்கிணைந்த முனையம் டிஜிட்டல் மயமாகக் கட்டப்பட்டு வருகிறது. அவை புதிய பன்னாட்டு முனையமாக செயல்பட உள்ளது. சுங்கத்துறை, குடிபெயர்வு, பாதுகாப்பு பிரிவுகள் என பல்வேறு அம்சங்களுடன் தயாராகி வருகிறது.
இந்த புதிய முனையம் சர்வதேச தரத்தில் முற்றிலும் தானியங்கி வசதிகளைக் கொண்டதாக அமைகிறது. அதன் உள்பகுதியில் கலை, கலாசாரம், மொழி, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள், சுற்றுலா இடங்கள் இடம்பெறுவதோடு, அதன் மேற்கூரை அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு டெர்மினல் கட்டடங்கள், பேக்கேஜ் கன்வேயர், ஏர் கண்டிஷனர், ஐ.டி மற்றும் ஏர்போர்ட் சிஸ்டம், மல்டி லெவல் கார் பார்க்கிங் என மிகப்பெரிய நவீன தொழிநுட்ப வசதிகளோடு சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகள் வருகை இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையும் கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது 95 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயம் திறக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் திறக்கப்பட்டவுடன் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளும், ஒரே செல்போன் செயலில் செய்து கொள்ள புதிய செயலியை உருவாக்க உள்ளதாகவும் விமானநிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை:இந்தியாவில் இருந்து இலங்கையின் கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜாஃப்னா எனப்படும் யாழ்ப்பாணத்திலும் விமான நிலையம் உள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் நிலையத்திற்கு விமான சேவைகள் இல்லாத நிலை இருந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து விமான சேவையை நடத்த வேண்டும் என்று, பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன.
இதையடுத்து ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய ரக ஏடிஆர் விமானங்களை இயக்கி வந்தது.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு கரோனா வைரஸ் காரணமாக சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு, கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைத்து விதமான செயல்களும் சகஜ நிலைக்குத் திரும்பிய பின்னும் யாழ்ப்பாணத்திற்குமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது.
கோரிக்கைகளுக்கு பின்னர் இண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, இம்மாதம் மீண்டும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே விமான சேவை இருந்த நிலையில் தற்போது நான்கு நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டது. இது இலங்கை தமிழர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக அமைந்தது.
குழப்பம் ஏற்படுத்திய 250 கோடியில் புதிய கார் பார்க்கிங்:சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 250 கோடியில், 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 2,150 கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கான ஆறு அடுக்கு மாடி நவீன கார் நிறுத்தம் இம்மாத தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.