தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருக்கன்குடி கோயில் முறைகேடுகளை விசாரிக்கக் கோரிய வழக்கு: அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்! - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

மதுரை: விருதுநகரிலுள்ள பிரசித்திபெற்ற இருக்கன்குடியில் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோயிலில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்கக் கோரி வழக்கு
கோயிலில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்கக் கோரி வழக்கு

By

Published : Feb 6, 2021, 5:36 PM IST

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேவுள்ள இருக்கன்குடி முத்துமாரியம்மன் கோயில் பழமையானது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தென்மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு ஆண்டுதோறும் நடக்கும் ஆடித்திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பர். ஆனால், இங்கு வரும் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. அங்கு பலவிதமாக விதிமீறல்கள் நடக்கின்றன. கோயில் பகுதியை சுகாதாரமாக பராமரிக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாகபாதுகாப்பு அறையைத் திறக்கவில்லை. அங்குள்ள வணிக வளாகம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. 'போலீஸ் அவுட் போஸ்டு'க்கு கோயில் மின்சாரம் தான் பயன்படுத்தப்படுகிறது. கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த முடி காணிக்கை திருட்டு வழக்கில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கோயில் நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்குரிய வசதிகளை முறைப்படுத்தி சிறப்பாக செயல்பட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கவும், இக்குழு ஆலோசித்து பக்தர்களின் சிரமத்தை போக்கி, தேவையான வசதிகளை செய்யவும், கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனு குறித்து அறநிலையத்துறை ஆணையர், விருதுநகர் ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:எந்த மதமும் தான் பெரியது என்று கூறவில்லை - மோகன் சி லாசரஸ் வழக்கில் நீதிமன்றம் கருத்து

ABOUT THE AUTHOR

...view details