ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமான பவானிசாகர் அணையின் துணை அணையான கொடிவேரி, தடாப்பள்ளி, அரக்கன்கோட்டை கால்வாயை நம்பி 70 கிராம மக்கள் குடிநீர்த் தேவை, விவசாயம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டம் பெருந்துறை, ஊத்துக்குளி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் கொடிவேரி அணைப்பகுதியில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தித்திற்கான கட்டுமானத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது.
குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தண்ணீரை விநியோகிக்காமல் சித்தோடு முதல் திருப்பூர் வரை உள்ள நிறுவனங்களுக்கு 18 கோடி லிட்டரும், சிப்காட் நிறுவனத்துக்கு இரண்டு கோடி லிட்டர் தண்ணீரும் வழங்கப்பட்டுவருகிறது.
பொதுமக்களுக்கான திட்டமாக அறிவிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் இத்திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஈரோட்டைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காந்தி, கொடிவேரி அணையை நம்பியுள்ள 40 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும். திட்டத்துக்கு எதிராக அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை அதனால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
அரசுத் தரப்பில், குடிநீர்த் தேவைக்காக மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் தனியாருக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் யூகங்களின் அடிப்படையில் தனியாருக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.