தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதல்வரை திடீரென சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்.. பின்னணி என்ன? - அரசியல் மற்றும் வர்த்தகத் தலைவர் விர்சா பெர்கின்ஸ்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்தியாவிற்கான அமெரிக்க நாட்டு தூதர் எரிக் கர்செட்டி (Eric Garcetti) சந்தித்துப் பேசினார். அப்போது, 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மு க ஸ்டாலின்
mk stalin

By

Published : Jun 16, 2023, 3:27 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (16.6.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்தியாவிற்கான அமெரிக்க நாட்டுத் தூதர் எரிக் கர்செட்டி (Eric Garcetti) சந்தித்துப் பேசினார். அப்போது, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, "அமெரிக்காவும் தமிழ்நாடும் வலுவான பொருளாதார உறவை பல ஆண்டுகளாக கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 400-க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவில் முதலீடுகள் செய்து இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் அமேசான், Caterpillar, CTS, IBM போன்ற பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு புதிய அமெரிக்க நிறுவனங்களும் சமீபத்தில் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன.

இந்தியாவின் முதல் மூன்று தொழில்மயமான மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த மாநிலமாகவும், ஆசியாவிலேயே முதல் மூன்று இடங்களில் ஒன்றாகவும் தமிழ்நாட்டை மாற்றுவதே எங்கள் நோக்கம். தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருகின்றன. திறமையான மனித வளம் மற்றும் அமைதியான தொழில் உறவுகள் தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த இடமாக ஆக்குகின்றன.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம்? - ஆளுநரின் மறுப்புக்கு அமைச்சர் பொன்முடி பதில்!

ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மின்னணு வன்பொருள், தகவல் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான மகத்தான வாய்ப்புகளை தமிழ்நாடு வழங்குகிறது. நாங்கள் சிறந்த சமூக உள்கட்டமைப்பை வழங்குவதுடன் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் கல்வி ஒத்துழைப்புகளை உருவாக்கவும் வளர்க்கவும் விரும்புகிறோம்.

மேலும், டென்வர் மற்றும் சான் அன்டோனியோ நகரங்களுடன் சென்னையும், டோலிடோ நகரத்துடன் கோயம்புத்தூரும் Sister City ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. தமிழ்நாடு தனது அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வரும் ஜனவரி மாதத்தில் நடத்துகிறது. அதில் அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த, அமெரிக்கா இந்த மாநாட்டில் ஒரு கூட்டு நாடாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்" என்று கூறினார்.

இச்சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சென்னையிலுள்ள அமெரிக்க நாட்டு துணைத் தூதர் ஜூடித் ராவின் அவர்கள் (Judith Ravin), அரசியல் மற்றும் வர்த்தகத் தலைவர் விர்சா பெர்கின்ஸ் (Virsa Perkins), அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர் புன்னூஸ் மேதன் (Punnoose Mathen) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி மீது முதலமைச்சர் விமர்சனம் - வீடியோ மூலம் பதில் அளித்த ஈபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details