தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த தம்பியை கட்சியிலிருந்து நீக்கிய பாணியிலே தான் ஓபிஎஸ் நீக்கம் - அனல் பறந்த எடப்பாடி தரப்பு வாதம் - Resolutions and Election of Gen Secretary

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு விசாரணையில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடினார்.

பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் அனல் பறந்த எடப்பாடி தரப்பு வாதம்
பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் அனல் பறந்த எடப்பாடி தரப்பு வாதம்

By

Published : Jun 12, 2023, 8:13 PM IST

சென்னை:அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு விசாரணையில், அதிமுக கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் எந்த விளக்கமும் அளிக்காமல் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டதாக பழனிசசாமி தரப்பு விவாதங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று (ஜூன் 12) ஆறாவது நாளாக விசாரணைக்கு வந்தபோது, பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதம் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு விவாதத்தில் ஈடுபட்ட அவர், “எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அங்கீகரித்து அவைத் தலைவர் கையெழுத்திட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்ததால், பொதுக்குழுவின் அதிகாரத்தைப் பற்றி சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த வேட்பாளர்தான் தேர்தலில் போட்டியிட்டார். மார்ச் 28ஆம் தேதி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் எனக்கூறி வருகிறார். அவரது கையெழுத்துடன் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடகாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து வேட்புமனுவை அந்த நபர் வாபஸ் பெற்றார். கட்சி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி, கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். இந்த வழக்கில் முடிவு வரும் வரை எந்த நடவடிக்கையும் வேண்டாம் என தவிர்த்து வருகிறோம்.

கட்சி விதிப்படி பன்னீர்செல்வத்தை நீக்கியுள்ளதாகவும், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் குழப்பம் மட்டுமே அதிகரிக்கும் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. எட்டு மாதங்களுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அடிமட்ட அளவில் இருந்து ஜனநாயக அடிப்படையில் செயல்படும் அதிமுகவில், பொதுக்குழு முடிவுகள் அனைத்து உறுப்பினர்க்ளையும் கட்டுப்படுத்தும். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு 75 மாவட்ட செயலாளர்களில், 20 பேர் எடப்பாடி பழனிசாமியை முன்மொழிந்த நிலையில் மீதமுள்ள 55 பேர் உள்ளனர். ஆனால் பன்னீர்செல்வத்துக்கு 95 சதவீதத்தினர் எதிராக உள்ளனர். அதனால் அவர் போட்டியிட அனுமதிக்கப் படவில்லை.

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், ஒருங்கிணைப்பாளர் மீது எவரும் நடவடிக்கை எடுக்க முடியாது என வாதிடப்பட்டது. ஆனால் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் உள்ளது. அதிமுகவில் உறுப்பினர்களை நீக்கும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என விதி கூறுகிறது. ஆனால், இதுவரை அப்படி குற்றப்பத்திரிகை ஏதும் வழங்கப்படவில்லை. மாறாக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்படும்.

உடனடி நடவடிக்கைக்கு எந்த குற்றப்பத்திரிக்கையும் வழங்க வேண்டிய அவசியமில்லை. பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவில்லை என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என கூறமுடியாது. கட்சி விதிகளில் கூட உடனடி நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சி விதிகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டவை அல்ல. காலமாற்றத்துக்கு ஏற்ப கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். மேலும், ஒருங்கிணைப்பாளராக இருந்த போது கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் எந்த விளக்கமும் கேட்காமல் தன் சொந்த தம்பி ராஜாவை கட்சியை விட்டு நீக்கி ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்தார்.

அதே நடைமுறை தான் அவரது நீக்கத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலில் தகுதியானவர்கள் போட்டியிட வழிவகை செய்யவதற்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என பொதுக்குழுவில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், அடிப்படை தொண்டர்களிடம் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.

பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், கட்சி விதிப்படி நீக்கப்பட்டுள்ளதாக விளக்கி”, தனது வாதத்தை நிறைவு செய்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் வாதத்திற்காக வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 15ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:மயான பாதையை எதிர்த்து கலாஷேத்ரா வழக்கு: மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details