தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2021, 10:34 PM IST

ETV Bharat / state

திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்வு தான் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்வு தான் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்வு தான்
திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்வு தான்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டி ராஜ்பவனில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்தார்.

அவருடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம், '9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு, தில்லுமுல்லு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக நடந்துள்ளது. அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எந்தவித முறைகேடும் இல்லாமல் ஜனநாயகரீதியில், நேர்மையாக நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் அடங்கிய 11 பக்க மனுவை வழங்கினார்.

தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகப் படுகொலையை நடத்தியுள்ளது.

அதிமுகவில் வெற்றி பெற்றவர்களைத் தோல்வி அடைந்தவர்களாக அறிவித்து தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர்களின் வெற்றியைக் கால தாமதமாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களின் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தனர். தேர்தலில் முறைகேடு நடைபெறும் என்பதால் நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றம் எங்கள் கோரிக்கை நியாயமானது எனத் தெரிவித்தது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. நாங்கள் ஆட்சியிலிருந்த பொழுது ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தினோம். அந்த தேர்தலில் யார் வெற்றிபெற்றார்களோ, அவர்களை முறையாக அறிவித்தோம்.

காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை

திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்வு தான்

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக அமைச்சரின் உதவியாளர் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைகிறார். இதுகுறித்து காவலர் புகார் தருகிறார். ஆனால், மிரட்டல்கள் தொடர்ந்து வந்ததை அடுத்து, அந்த காவலர் உயிருக்கு அஞ்சி, புகாரை வாபஸ் வாங்கினார். காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

விலைவாசி உயர்வு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது. அதிமுகவிற்கும் சசிகலாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்வு தான்" என்றார்.

இதையும் படிங்க:மூத்த பஞ்சாயத்துத் தலைவியாக பதவியேற்றார் 90 வயது மூதாட்டி

ABOUT THE AUTHOR

...view details