சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று உடன் (மார்ச் 19) நிறைவு செய்யப்பட்டது. இதனிடையே அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வகையில் மொத்தமாக மார்ச் 18 மற்றும் 19 ஆகிய 2 தேதிகளில் 222 வேட்புமனுக்கள் எடப்பாடி பழனிசாமி பெயரில் பெறப்பட்டன.
இதையடுத்து இன்று (மார்ச் 20) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி வேட்புமனு ஏற்கப்பட்டதாக அதிமுகவின் தேர்தல் ஆணையாளர்களாக நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தெரிவித்தனர். இந்த பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர், வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட நீதிபதி, பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடையில்லை. ஆனால், தேர்தலின் முடிவை அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். அதோடு மார்ச் 22 ஆம் தேதி இந்த வழக்கை மீண்டும் விசாரித்து மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அந்த வகையில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல்(சிவில்) வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் அளிக்க உத்தரவிட்டு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு வழக்கை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. இதனிடையே அறிவிக்கப்பட்ட பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஏப்ரல் 11ஆம் தேதி தொடரப்பட்ட மற்றொரு வழக்கை நீதிமன்றம் மார்ச் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
அதோடு மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பையும் வழங்க இருக்கிறது. அது மட்டுமல்லாமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு நிலுவையில் இருப்பதால் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ். கடிதம் எழுதி உள்ளார். அதோடு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அதிமுக ஆட்சியில் சிறப்பான பட்ஜெட்; அது ஓபிஎஸ்ஸால் தானே என மடக்கிய செய்தியாளர்; ஜெர்க் ஆன ஈபிஎஸ்