சென்னைஅண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சர் தலைமையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாட்டின் எல்லையில் வருகின்ற மாவட்டங்களில் பிற மாநிலங்களுக்குத் தருவதற்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்கு, இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ரேஷன் அரசி கடத்துபவர் மீது குண்டர் சட்டம் மீது பாய்ந்துள்ளது.
தஞ்சாவூரில் அதிக மழை பெய்த காரணமாக 5,000 நெல் மூடை நனைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அது முற்றிலும் தவறான செய்தி. இது அவரது வகிக்கும் பதவிக்கு அழகல்ல. மேலும், தொடர்ந்து தவறான தகவல்களை அறிக்கையாக வெளியிட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 12 லட்சத்து 40ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கியுள்ளோம். 2.5 லட்சம் போலி ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன. 12 லட்சத்து 50 ஆயிரம் பெயர்கள் அவர்கள் உயிரிழந்ததையடுத்து குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் நெல்லுக்காகக் கட்டப்பட்ட செமி குடோன் தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறும் 10000 மெட்ரிக் டன் என்ற அளவில் தான் உள்ளது. மேலும் அங்கே சாலை வசதி இல்லாமல், பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்ததை இந்த திமுக அரசு ஆறு கோடி ரூபாய் மின் இணைப்புக்கும் ஆறு கோடி ரூபாய் சாலை அமைப்பதற்கும் ஒதுக்கீடு செய்து அந்த குடோன்களை பயன்பாட்டிற்குக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.