சென்னை:திமுக, தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையாக கொடுத்த, "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களுக்கு முழு நேர பணி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தியும் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கடந்த சில நாட்களாகவே இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
மேலும், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" (Equal Pay for Equal Work) வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தங்களின் உரிமைக்காக அறவழியில் போராடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அனைத்து ஆசிரியர்களையும் திரும்பி பள்ளிகளுக்குச் செல்லுமாறும், தங்கள் கோரிக்கை பரிசீலித்து நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால், தங்களுக்குத் தேவையான உரிமை உடனடியாக வேண்டும் என இன்றும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் அதிகாலையிலேயே, அதிரடியாக குவிக்கப்பட்ட போலீசாரால் ஆசிரியர்கள் அனைவரும் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில், இச்செயல் குறித்து எதிர்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வருகிறது. தற்போது இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'X' கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த நீங்கள், 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
அவர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட, நீங்கள் கொடுத்த 311 மற்றும் 181வது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக் கூட முழுமையாக பரிசீலிக்காமல், வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும், குழந்தைகளோடும் கைது செய்ததையும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்ற பொய்யை, சிறு தயக்கம் கூட இல்லாமல் மக்களிடம் கூறி ஏமாற்ற முயற்சிக்கும் விடியா திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அவர்களை அழைத்துப் பேசி, அரசின் நிலைமையை விளக்கி, ஒரு சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அரசு அதன் தீர்வுகளை ஆசிரியர்கள் மீது திணித்தது தான் போராட்டம் தொடர்வதற்கு காரணம் ஆகும்.
இந்த உண்மைகளையெல்லாம் உணராமல், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தங்களின் வாழ்வுரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அடக்குமுறை மூலம் நசுக்க முயலக் கூடாது.