சென்னை:அ.தி.மு.கவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, வரும் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரையும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், ஒற்றை வாக்கு வழியே இணைந்தே தேர்வு செய்வர் என கட்சி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல், நேற்று (டிசம்பர். 3) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
இந்நிலையில் இன்று (டிசம்பர். 4) எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முக்கிய நிர்வாகிகள் 15 பேர் முன்மொழியவும், 15 பேர் வழி மொழியவும் தேர்தல் ஆணையர்கள் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.