சென்னை: 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை - 2' (Dravidian Model Training Workshop) மற்றும் 'திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா' (DMK Youth Team App Inauguration) சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.14) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர் சேகர் பாபு, இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர் அணியைச் சார்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், 'தமிழ்நாட்டினுடைய, இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வணக்கம்' என்று குறிப்பிட்டார்.
இளைஞர் அணி நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை?மேலும் பேசிய அவர், 'நான் இப்போது பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன். பிறந்த வீட்டிற்கு மட்டும் அல்ல; வளர்ந்த வீட்டிற்கும் வந்திருக்கிறேன்.அதுவும் வளர்ந்து கொண்டிருக்கும் வீட்டிற்கு வந்திருக்கிறேன், உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன். தலைவனாக பெருமைப்படுகிறேன். மூன்றரை வருடங்கள் இளைஞரணி நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட நிலையில் அதற்குப் பதில் அளித்த முதலமைச்சர், ’மூன்றரை வருடங்கள், இளைஞரணி நிகழ்ச்சிக்கு என்னை ஏன் கூப்பிடவில்லை?’ எனக் கேள்வி எழுப்பினார்.
’ஆட்சி பொறுப்பில் இருக்கும் காரணத்தால் பல்வேறு பணிகள் இருக்கும் என்ற காரணத்தால் அதனை தவிர்த்து இருப்பார் என நான் புரிந்துகொண்டேன். ஆனால் இளைஞர் அணியின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறேன். மேலும், திமுகவில் இருக்கக்கூடிய மற்ற அணிகளை விட இளைஞரணி முதல் அணியாக இருப்பது பாராட்டுக்குரியது. இதை இங்கு சொல்வதால் மற்ற அணிகள் கோபப்பட மாட்டார்கள்.
உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு வெற்றியைத் தேடி தந்தார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கட்சிக்கு எழுச்சியைத் தேடி தந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு செங்கல் பிரசாரம் எந்த அளவுக்கு பயன்பட்டது. மக்கள் மனதில் எப்படி பதிந்தது என்பதை அதிகம் நான் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்றார்.
இளைஞரணியால் மகிழ்ச்சி: ’மேலும், அரசாங்கம் செய்ய வேண்டிய நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்கு இளைஞர் அணி மூலம் அறிக்கை வெளியிடு, நீர் நிலைகளை சுத்தம் செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டவர் உதயநிதி ஸ்டாலின். இந்தி திணிப்பு (Hindi Imposition) சூழல் வரும்போதும், நீட் தேர்வு (NEET Exam) பிரச்னையில் இளைஞர் அணியும் பங்கேற்றது என்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியுமா? கடல் அலையில் கால்களை நனைக்க முடியுமா? என்ற ஏக்கம் கேள்விக் குறியாகவே இருந்தது.
எல்லா தொகுதியிலும் 'திராவிட மாடல்' பாசறை:ஆனால், கடற்கரையில் மரப்பலகை அமைத்து எல்லோரையும் போன்று மாற்றுத்திறனாளிகளும் தங்கள் கால்களை நனைக்கலாம் என்று எங்கும் இல்லாத சாதனையை படைத்தவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகளுக்கெல்லாம் மகுடம் வைத்ததைப் போன்று இருப்பது அவர் செய்துகாட்டிய 234 தொகுதியிலும் 'திராவிட மாடல்' பாசறை கூட்டம். பேசி பேசி வளர்ந்த கட்சி திமுக, இப்போது நவீன காலமாக மாறுவதால் இந்த முறை மாறி வருகிறது. கலைஞர் போகாத ஊரே இருக்காது.