தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவை விரைவில் தொடங்குவதற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் முடிவுசெய்தது. கரோனா பெருந்தொற்று காரணமாக சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை நேரில் நடத்தாமல் அதையும் இணையத்தின் வாயிலாக நடத்துவதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் (இணையம் வாயிலாக) பதிவைத் தொடங்குவதற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தயாராகிவருகிறது. இது குறித்த அறிவிப்பு 10 நாள்களுக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.
பதிவுசெய்ய கால அவகாசம்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பதிவு மேற்கொள்ள 40 நாள்கள் கால அவகாசம் வழங்கப்படும்.
சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் வரையில் நடைபெறுவதால், அவர்களுக்கென்று தனியாக நான்கு நாள்கள் அவகாசம் வழங்கப்படும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.