சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் வழக்கு ஆவணங்கள் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு விசாரணையை செப் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை நுங்கம்பாக்கம், முகப்பேர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.