அதிமுக சின்னமான இரட்டை இலையைப் பெறுவதற்காகத் தினகரன் சார்பில் டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர், டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினரால் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
குறிப்பாக, சுகேஷ் சந்திரசேகர் மீது 21க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி அமலாக்கத் துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் ஐபோன் மூலமாக பல ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதாக டெல்லி தொழிலதிபர்களிடம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அதனடிப்படையில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், சுகேஷ் சந்திரசேகருக்கு வெளியில் இருந்து உதவியதாக இருவரை கைது செய்தனர். சுகேஷ் சந்திரசேகரின் செல்போனையும் பறிமுதல் செய்து சைபர் ஆய்வக கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.