சென்னை: 109 ஆண்டுகளுக்கு முன்பாக ஜூலை மாதம் தொடங்கிய முதலாம் உலக போர், அப்போதைய நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது.
இந்தியா அன்றைய காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்கள் வசம் இருந்ததால், முதலாம் உலகப் போரின் போது அப்போதைய சென்னையான மதராஸ்பட்டினத்தின் மீது தனிப் பார்வையை செலுத்திய ஜெர்மனி, தனது தனித்துவமான மற்றும் அச்சத்தை ஏற்படுத்த கூடிய போர் கப்பலான எஸ்.எம்.எஸ்.எம்டன் கப்பலை இந்தியாவுக்கு அனுப்பியது.
எஸ்.எம்.எஸ்.எம்டன்: 1908ஆம் ஆண்டில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஜெர்மன் கடற்படையின் ஒரு தனித்துவமான சிறந்த போர்க் கப்பல் எஸ்.எம்.எஸ்.எம்டன் ஆகும். அலைகள் அதிகமாக வீசும் கடலிலும், எதிரிகளின் தாக்குதலை சமாளித்து, எதிர் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த கப்பல் கட்டமைக்கபட்டு இருந்தது.
ஜெர்மனியின் எஸ்.எம்.எஸ்.எம்டன் போர்க்கப்பல் இதில், முதல் தரமான மற்றும் அதி வேகத்துடன் செயல்படும் பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு அவை எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் செய்யபட்டது. 1914 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பல நாடுகளாலும் வியந்து பார்க்கும் அளவில் இந்த கப்பலின் போரிடும் திறன் இருந்தது.
1914இன் இறுதியில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்திய கூட்டுப் படைகளின் 30 கப்பல்களுக்கு 'எம்டன்' எமனாக இருந்துள்ளது. இக்கப்பல் கடைசியாக அஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால் கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது என்பது வரலாறு.
சென்னையின் மீது தாக்குதல்: சரியாக இன்றிலிருந்து 109 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய மதராஸ்பட்டனம் ஆங்கிலேயர்களின் வசம் இருந்தது. அப்போது, உலகம் முழுவதும் உலகப் போர் சண்டை நடந்துக் கொண்டிருந்தது. ஆனால், அன்றைய சூழ்நிலையில் சென்னை மீது தாக்குதல் நடக்கப் போகிறது என்று தெரியாமல் தமிழர்களும், ஆங்கிலேயர்களும் அந்த இரவை கடந்து கொண்டிருந்தனர்.
அதே சமயம், ஜெர்மனியில் இருந்து வரும் வழியில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வங்காள விரிகுடாவிற்குள் எம்டன் கப்பல் அமைதியாக நுழைந்தது. சென்னை துறைமுகத்தில் இருந்து 2 நாட்டிகல் மைல், அதாவது 3.5 கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுக் கொண்டு இருந்தது. அந்த போர்க் கப்பலின் வருகையை அறிந்த ஆங்கிலயர்கள், சென்னை நகர் முழுவதும் மின்சாரத்தை தூண்டித்து, இருளில் மூழ்கடித்தனர்.
தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இருக்கும் இடத்தில் தான் பழைய கலங்கரை விளக்கம் இருந்தது. அந்த கலங்கரை விளக்கம் வெளிச்சத்தில், எஸ்.எம்.எஸ்.எம்டன் கப்பல், 3 ஆயிரத்து 500 டன்னுக்கு மேலான வெடிப் பொருட்களுடனும் 22 பீரங்கிகளை கொண்டு தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தது.
மேலும், அந்த கப்பலில் இருந்த கேப்டன் 'வான் முல்லர்' உத்தரவிட்டதும் தயார் நிலையில் இருந்த 22 பீரங்கிகள் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சென்னையில் இருக்கும் வர்த்தக கப்பல் மீதும் தாக்குதல் நடத்தியது. இது குறித்து வரலாற்று ஆய்வாளர் கூறுகையில், "முதலாம் உலக போர் நடைபெற்றபோது, இந்தியாவில் சென்னை தான் முக்கிய வர்த்தக நிலையமாக இருந்தது.
எஸ்.எம்.எஸ்.எம்டன் கப்பலின் கேப்டன் வான் முல்லர் இந்த வர்த்தக நிலையத்தில் தாக்குதலை நடத்துவதற்காக, சென்னை வந்த எம்டன் கப்பல், தனது முதல் தாக்குதலை சென்னை துறைமுகத்தின் மீது ஆரம்பித்தது. குறிப்பாக, அப்போது சென்னை துறைமுகத்தில் இருந்த பர்மா ஆயில் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 10 நிமிடங்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளான சென்னை உயர்நீதிமன்ற வளாகம், துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகளின் கிளப், பொது மருத்துவமனை, வேப்பேரி, நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலை, பூந்தமல்லி ஹை ரோடு, ராயபுரத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை, காசா மேஜர் சாலை, ஜார்ஜ் டவுன் ஆகிய இடங்களில் எம்டன் போர்க் கப்பலின் பீரங்கிகள், குண்டு மழைகளை பொழிந்தன.
வெறும் பத்தே நிமிடங்களில் சென்னை மாநகரை கதிகலங்கச் செய்துவிட்டு, பிரிட்டனின் எதிர்த் தாக்குதலைச் சந்திக்க காத்திருக்காமல், கன நேரத்தில் கிழக்கு நோக்கிச் சென்றுவிட்டது" என்று தெரிவித்தார்.
மதராசபட்டினத்தை விட்டு வெளியேறிய மக்கள்: இந்த தாக்குதல் சென்னையில் இருந்த பல்வேறு மக்களை பீதி அடையவைத்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் அவசர அவசரமாக மதராசப்பட்டினத்தை விட்டு காலி செய்துவிட்டு வெளியேறத் தொடங்கினர். குறிப்பாக வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
சில ஆண்டுகள் கழித்து வந்த அனைவரும், வட சென்னை மற்றும் சேப்பாக்கம், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் குடியேறினர். மேலும் அன்றைய தினத்தில் தினமும் 15 ஆயிரம் பேர் சென்னையை விட்டு வெளியேறியதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சென்பகராமன்: சென்னை நோக்கி கேப்டன் வான் முல்லர் தலைமையில் வந்த எஸ்.எம்.எஸ்.எம்டன் கப்பலில், இந்திய விடுதலை போராட்ட வீரரான செண்பகராமனும் இடம் பெற்று இருந்தார். ஜெர்மானிய படையில் அவர் இருந்த போதும், இங்கிலாந்தின் பிடியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தார்.
இவரின் கோரிக்கையை ஏற்றே, சென்னை மீது, முல்லர் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான உறுதியான ஆவணங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. சென்னையில் எஸ்.எம்.எஸ்.எம்டன் கப்பலின் தாக்குதல் மக்களை பெரிதும் பாதிக்காமல் இருந்தாலும், மக்களிடம் உளவியல் ரீதியாக 'எம்டன்' என்ற பெயர் இன்று அளவும் அச்சத்தை ஏற்படுத்தும் பெயராகத் தான் இருக்கிறது.
இதையும் படிங்க:ம.பியில் 108 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலை திறப்பு!