சென்னை:பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது எனவும், அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்தால் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவரின் விருப்பத்தின் அடிப்படையில் பாடப் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கு உயர் நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட பிரிவில் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு 50 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் தேர்வு நடத்தி, மதிப்பெண் அடிப்படையில் விருப்ப பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவிற்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாகப் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பதை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், 2021-22ம் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் சேர்க்கை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வழங்கப்பட்டன.
அந்த வழிமுறைகளில் சில திருத்தங்கள் செய்து வெளியிடப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் தனியார் சுயநிதி பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கைத் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை பிரிவுகளில், ஏற்கனவே சேர்க்கை அனுமதிக்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கைக்குட்பட்டு, மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில், அவர்களது விருப்பத்திற்கு ஏற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கேட்டு விண்ணப்பிக்கும் நிலையில், கரோனா தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கலாம்.
மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வர பெறுகிறதோ, அந்த சூழ்நிலையில் அதற்கான விண்ணப்பித்த மாணவர்களின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களின் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
பத்தாம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில், தேர்வு எதுவும் நடத்த தேவை இல்லை. பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் மூன்றாவது வாரத்தில், அப்போது கரோனா தொற்று குறித்து அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில், வகுப்புகளை தொடங்கலாம்.
இந்த அறிவுரைகளின் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
மேலும் 2021 - 22 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 வகுப்பிலுள்ள மாணவர்களுக்குத் தொடர்ந்து கல்வித் தொலைக்காட்சி உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறையில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்" என, அதில் தெரிவித்துள்ளார்.