தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! - சென்னை

சென்னை: கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை வனப்பாதுகாவலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai HC

By

Published : Sep 20, 2019, 2:50 PM IST

சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 22 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது. காரமடை, பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர், மதுக்கரை, ஆனைமலை வால்பாறை உள்ளிட்ட பகுதிகள் வனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.

யானை நடமாட்டம் அதிகம் உள்ள ஜக்கனேரி-வேதார், கல்லாறு- நெல்லிதுறை, ஆனைகட்டி- வீரபாண்டி, மருதமலை- தனிகண்டி, வாளையார் கல்கொதி யானை வழித்தடங்களில், குறிப்பாக தடாகம் பகுதியில் தற்போது அதிக அளவில் செங்கல் சூளைகள் உள்ளதால், யானை வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

கடந்த 2008ஆம் ஆண்டு தடாகம் பகுதியில் விநாயகம் என்ற யானை நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது, இதேபோல் சின்னத்தம்பி யானை உடுமலைப்பேட்டை பகுதியில் நுழைந்து சேதப்படுத்தியது.

கடந்த 1999 முதல் 2014 வரை 100 யானைகள் இறந்துள்ளதாகவும், கடந்த 2011 முதல் 2018 வரை யானை தாக்குதலால் 77 பேர் இறந்ததாகவும் 61 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 27 பேர் யானை தாக்கி பலியானதாக வனத்துறையே உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே நீலகிரி வனப்பகுதியில் யானை வழித்தடங்களை பாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைப்போல், கோவையிலும் யானை வழித்தடத்தை கண்டறிந்து அதை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் நீதிபதி சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதிகள் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என கோவை மாவட்ட முதன்மை வனத்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கோவை அருகே சுற்றித்திரியும் கொம்பன்கள் - பொதுமக்கள் பீதி!

ABOUT THE AUTHOR

...view details