சென்னை:பல்லாவரம் அடுத்த பம்மல் கிரிகோரி தெருவைச் சேர்ந்தவர் ஜோதி (66). இவரது கணவர் தேவராஜ் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், தனது மகன் சம்பத் (43), மருமகள் மற்றும் இரு பேரன்களோடு ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்.27) 11 மணியளவில், ஜோதி உள்ளிட்ட குடும்பத்தினர், பணி முடிந்து வரும் மகன் சம்பத்திற்காக அவர்களது வீட்டு வாசலில் காத்திருந்துள்ளனர். அப்பொழுது அந்த தெரு வழியாக வந்த இளைஞர்களைப் பார்த்து சாலையில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பலமாக குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள், சாலையில் கிடந்த கற்களை எடுத்து நாய்களை விரட்டி அடிக்கத் தொடங்கி உள்ளனர்.
அவர்களின் அடியில் இருந்து தப்பிப்பதற்காக நாய்கள் நாலாபுறமும் சிதறி ஓடவே, இளைஞர்களும் விரட்டி விரட்டி அடிக்கத் தொடங்கி உள்ளனர். அவ்வாறு அடித்த கற்களில் ஒன்று, மூதாட்டி ஜோதி வீட்டினுள்ளே வந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜோதி ஏன் இவ்வாறு நாயை அடிக்கிறீர்கள்? அமைதியாக செல்லக் கூடாதா என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நான்கு இளைஞர்களும், தங்களது நண்பர்களுக்கு கால் செய்து அவர்களை வரவழைத்துள்ளனர்.