சென்னை:எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையை நாடிய தாய் சேய்களை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "கடந்த சில தினங்களுக்கு முன்பு, 50 வயதாகிய ராதிகா திருமணமாகி 25 வருடங்கள் குழந்தை இன்றி தனியார் மருத்துவமனையில் ஐந்து லட்சத்திற்கும் மேல் செலவு செய்து செயற்கை முறையில் கருத்தரித்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும் ராதிகாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என உறுதி செய்யப்பட்டு ஏழு மாதம் வரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
எட்டாம் மாதத்தின் தொடக்கத்தில் ராதிகாவிற்கு இரண்டு கால்களில் அதிக அளவு வீக்கமும், நெஞ்சில் நீரும் கோர்த்து தீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அதிக செலவாகும் என்ற காரணத்தால் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். உடனே மருத்துவர்கள் பரிசோதித்து ராதிகாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருந்தனர். மேலும் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவர்களை அழைத்து அவர்களின் ஆலோசனையும் பெற்று சிறந்த முறையில் சிகிச்சை அளித்தோம். அவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது.