தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது. நாளை முதல் 9,10,11,12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கவுள்ளது.
மாஸ்க் வழங்க ஏற்பாடு
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும்; மாணவர்கள் மாஸ்க் அணிந்து வருவதற்கு மறந்த விட்டாலோ அல்லது மாஸ்க் சரியாக இல்லாவிட்டாலோ அதற்கு பதில் வேறு மாஸ்க் வழங்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.
திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க மாஸ்க், சானிடைசர் வழங்கியுள்ளார்.
ஒரு நாளில் ஐந்து வகுப்புகள் மட்டுமே
அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்வந்து மாணவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு வகுப்பறையிலும், ஒவ்வொரு கழிவறையிலும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் அமர வைக்க வேண்டும் . ஒரு நாளில் ஐந்து வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். பள்ளிகளில் தற்போதைக்கு விளையாட்டு நேரம் கிடையாது.