சென்னை:தீபாவளி பண்டிகைக்குப் பின் 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வுகால அட்டவணை வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-2024 கல்வியாண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை(நவ.16) காலை வெளியிடவிருக்கிறார்.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை வழக்கமாக நடைபெறும். பொதுத்தேர்வு நடக்கவிருக்கும் அதேசமயத்தில் தமிழ்நாடு அதன் நாடாளுமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் நம்பப்பட்டு வருகிறது. அதேப்போல் இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் மத்திய அரசின் தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜெஇஇ(JEE) உள்ளிட்ட போட்டித் தேர்வும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான போட்டி தேர்வினை எழுதுவதில் எந்த வித சிரமமும் இல்லாத வகையில் மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணைகள் தயார் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து ஏற்கனவே பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் அரசு தேர்வுத் துறை மூலம் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் இந்தக் கல்வியாண்டில் பொதுத்தேர்வினை சுமார் 27 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்படையாத வகையில் தேர்வு அட்டவணை தயார் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2023 - 2024-ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12ஆம் பொதுத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையை தீபாவளிப் பண்டிகைக்குப் பின்னர் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்த நிலையில், நாளை ( 16.11.2023) காலை 9.30 மணியளவில் கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்விற்கான அட்டவணையை வெளியிடவிருக்கிறார்.
இதையும் படிங்க:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை துறை தொடர்ந்த வழக்கிலிருந்து நீதிபதி விலகல்!