அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு சென்னை: ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ''அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் ஏற்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது, தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக, இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்.
ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்புக்குப் பின், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருமனதாக என்னைத் தேர்வு செய்த அனைவரும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றுவேன். அதிமுக ஆட்சி அமையவேண்டும் என நினைக்கும் நபர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்ற அனைவரும் கட்சியில் சேர்த்துக்கொள்வோம்.
ஒன்றரை கோடி தொண்டர்களாக உள்ள இந்த இயக்கத்தை, இரண்டு கோடி தொண்டர்ளைக்கொண்ட இயக்கமாக உருவாக்க அனைவரும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு பூத்திலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்ந்த நபர்களை, கட்சியில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதிமுகவில் ஒற்றைத்தலைமை என நான் நினைக்கவில்லை. தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு வாய்ப்பு அளித்து உள்ளனர். தொண்டராக தொடர்ந்து உழைப்பேன்.
திமுகவை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி, அதிமுக மட்டுமே. அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம். மீண்டும் ஆட்சி அமைப்போம். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து மீண்டும் மனு அளிப்போம். நல்ல நடவடிக்கையை சபாநாயகர் எடுப்பார் என நம்புகிறேன். அதிமுக - பாஜக இடையே தமிழ்நாட்டில் கூட்டணி உள்ளது. கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட உள்ளோம். அங்கு வெற்றி பெறுவோம் என அங்குள்ள நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
அதனால், எந்தப் பிரச்னையும் இல்லை. அதிமுக கட்சி அலுவலகத்தில் கலவரம் செய்தது யார் என அனைவருக்கும் தெரியும். ஓபிஎஸ் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சட்டமன்றத்தில் இவ்வாறு பேசி உள்ளார். திமுகவின் பி டீமாக அவர் (ஓபிஎஸ்) செயல்பட்டார். அதிமுக அலுவலகத்தில் வந்து கலவரத்தில் ஈடுபட்டார். பொருட்களை திருடிச் சென்றார். திமுக, அவரைப் பயன்படுத்தி ஒரு நாடகத்தை அரங்கேற்றினர். மதுரையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மாநாடு நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், கர்நாடகாவில் ஈபிஎஸ் கையெழுத்திடும் வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கவும் அம்மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:கோடநாடு வழக்கு - முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஈபிஎஸ் இடையே பேரவையில் காரசார விவாதம்!