சென்னை:மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய மழையால் சென்னை மாநகரம், புறகர் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடுகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழைநீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, கடந்த வாரம் பெய்த மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒருவார காலமாக கையாளாகாத விடியா திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறைபாடால், தேவையின்றி பொதுமக்கள் தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.
நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும்:மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று இந்த விடியா திமுக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளம் சாக்கடையுடன் கலந்து, பொதுமக்கள் அவர்களுடைய வீடுகளை விட்டும், குடியிருப்பு பகுதிகளை விட்டும் வெளியேற முடியாத நிலையில், கடந்த ஒருவார காலமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை.
இன்னும் சகஜ நிலைக்கு திரும்ப ஒருவார காலம் ஆகும். ஏழை, எளிய, தினசரி வேலைக்குச் செல்லக் கூடியவர்கள், நடுத்தர மக்கள் இரண்டு வார காலம் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில், வேலை செய்ய முடியாமல் தங்களது 15 நாள் வருமானத்தை இழந்துள்ளதுடன், தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.
எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக வழங்குவதுடன், எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
வாகன பழுது நீக்கும் முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும்:ஏழை, எளிய, சாமானிய மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த மழை வெள்ளத்தால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இயங்க முடியாத நிலையில் உள்ளது.
இதை உடனடியாக அரசு, அந்தந்த வாகனங்களுக்குண்டான நிறுவனங்கள் மூலமாக, பகுதி வாரியாக சிறப்பு வாகன பழுது நீக்கும் முகாம்களை ஏற்பாடு செய்து, அந்த வாகனங்களை அரசு செலவில் பழுது நீக்கி, பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
போர்க்கால அடிப்படையில் குப்பைகளை அகற்ற வேண்டும்:பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிந்த பிறகு கழிவு நீர் உட்புகுந்ததால், வீடுகள் மற்றும் வீதிகள் சேறும் சகதியுமாக தேவையற்ற குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு அடைந்து தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசு போர்க்கால அடிப்படையில் சேறு, சகதி, குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், கிருமிநாசினிகளைத் தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும். அப்பகுதி மக்களுக்கு தகுந்த சுகாதார மருத்துவ சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து, சேற்றினால் ஏற்பட்டுள்ள சேற்றுப் புண், தோல் அரிப்பு (அலர்ஜி) போன்றவற்றிற்கு உரிய சிகிச்சையும், மருந்தும் அளிக்குமாறு வலியுறுத்துகிறேன்.
எண்ணெய் கழிவுகளை தூய்மைப்படுத்த வேண்டும்:சென்னை மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் மழை நீருடன் அப்பகுதியில் இயங்கிவரும் ஆலைகளின் ஆயில் கழிவுகளால் சுமார் ஐந்தாயிரம் குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப கூடுதலாக 25,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், எண்ணெய் கழிவுகளை தகுந்த தொழில்நுட்ப உதவியுடன் தூய்மைப் படுத்தும் பணியினையும் செய்துதர வலியுறுத்துகிறேன்.
சேதமடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும்:சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் கன மழையால் பெரும்பாலான சாலைகள், குறிப்பாக உட்புற சாலைகள் மழையால் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கிறது. சேதமடைந்த சாலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும்.
தொழிற்சாலை பாதிப்புகளுக்கு இழப்பீடு வேண்டும்:சென்னை அம்பத்தூர் சிப்காட் தொழிற்பேட்டை, நான்கு மாவட்டங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் மழை நீர் உட்புகுந்து இயந்திரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் முற்றிலுமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்து, உரிய இழப்பீடுகள் வழங்கி, மீண்டும் அத்தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவி:காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அதிகாரிகளை அனுப்பி பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் இழப்பீடாக வழங்க வலியுறுத்துகிறேன்.
மேலும், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும், நஞ்சை நிலங்களில் பயிர் செய்திருந்த நெற்பயிர்கள் தற்போது பெய்த கன மழையால் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 17,000 ரூபாய் வழங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக, மேற்கண்ட நிவாரணங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வழங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:சென்னையில் ஆக்கிரமிப்பு உள்ளதை ஆதாரத்துடன் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி