சென்னை:மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளாத விடியா திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகக் கூறிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வடிகால் அமைப்பதில் நடந்து முடிந்த பணிகளின் பட்டியல், செலவிட்ட தொகை கணக்கு, தொடர்ந்து பணி நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக இந்த ஆண்டு சென்னை அதிக மழை பொழிவைச் சந்தித்துள்ளது. இதனால் மாநகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு நீரில் மூழ்கியது. மழை நின்று மூன்று நாட்கள் ஆன நிலையில், இப்போது வரை சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சுமார் 38,500 பிரதான உட்புற சாலைகளில், சுமார் 20 ஆயிரம் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.
அதேபோல், சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல், மழை நீர் வடியாமல், கழிவு நீருடன் கலந்து தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னை மாநகரில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக கூறப்படும் நிலையில், ஏன் இன்னும் தண்ணீர் வெளியேறாமல் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் ஈ.பி.எஸ் கேள்வி எழுப்பியதோடு, இது குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கு முன்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் உள்பட, மாநில அளவில் புயல் அல்லது கனமழை குறித்து எனது தலைமையிலான அரசில் முன்னெச்சரிக்கைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
சென்னை மாநகரத்தில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகளாக (Nodal Officers) நியமிக்கப்பட்டு, வடகிழக்குப் பருவ மழையினை எதிர்கொள்வதற்கு தக்க ஆலோசனை வழங்கப்படும். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கினால், அதை எப்படி அப்புறப்படுத்துவது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே ஆய்வு செய்து, மழைக் காலங்களில் தேங்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்த திட்டமிடுவார்கள். இப்பணிகள் எல்லாம் வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கு முன்னதாகவே திட்டமிடப்படும்.
ஆனால், இந்த விடியா திமுக அரசு முன்னெச்சரிக்கையினை மக்களிடம் செய்யத் தவறிவிட்டது. இந்திய வானிலை மையம் ஐந்து நாட்களுக்கு முன்பே ரெட் அலர்ட் எச்சரிக்கை வழங்கிய பின்பும், விடியா திமுக அரசு மழை பெய்த பின்பு ராட்சத மோட்டாருக்கு ஏற்பாடு செய்வதும், மற்ற ஏற்பாடுகளை செய்வதும் இந்த பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.