சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் நடக்கும் மோசமான சம்பவங்களை ஆளுநரிடம் கூறினோம். திமுக ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களாக சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது. கடந்த 23.10.22 கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக, 18.10.22-ல் மத்திய உளவு அமைப்பு மாநில அரசுக்கு தீபாவளியில் தீவிரவாதத் தாக்குதல் தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறியது.
ஆனால், தமிழ்நாடு உளவுத்துறை, காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. உளவுத்துறை எச்சரிக்கையாக இருந்திருந்தால் முன்கூட்டியே கண்டுபிடித்திருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. மக்கள் அதிகம் உள்ள பகுதியில் நடந்திருந்தால் பலர் இறந்திருக்கக் கூடும். தீவிரவாதம் எங்கு அதிகம் நடக்கும் என உளவுத்துறைக்குத் தெரியும். அதை உளவுத்துறை கவனம் செலுத்தி தடுத்திருக்க வேண்டும். இந்த அரசு திறமையற்ற அரசு என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி கனியாமூரில் மாணவி மரணம் மர்மமாக நடந்துள்ளது. பெற்றோர் முறையாக புகார் தந்தும் காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரிக்கவில்லை. உளவுத்துறை முறையாக செயல்பட்டிருந்தால் மக்களிடம் கொந்தளிப்பு, வன்முறை நடந்து பள்ளி தீக்கிரையாகி இருக்காது. முதலமைச்சர் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்திற்கு 17ஆம் தேதி வரை விசாரணை எதுவுமே நடைபெறாமல் இருந்துள்ளது.
மாணவர்களிடம் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலத்திலிருந்து வருகிறது. அதை கட்டுப்படுத்தவில்லை. திறமையற்ற முதலமைச்சர் காவல்துறை உளவுத்துறையை சரியாக பயன்படுத்தாமல் தங்குதடையற்று போதைப்பொருள் விற்பனை நடக்கிறது. அனைத்துத்துறையிலும் லஞ்சம் அதிகரித்துள்ளது, திராவிட மாடல் என்பது கமிசன், கலெக்சன், கரெப்சன் என்று ஆகிவிட்டது.
அரசு மருத்துவமனையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் போதுமானவை இல்லை. மருந்து தட்டுப்பாடு இருப்பதை அமைச்சரே ஏற்றுக்கொண்டுள்ளார். அரசுதான் கொள்முதல் செய்து மருந்தை வழங்க வேண்டும். ஆனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். மருந்து தட்டுப்பாட்டிற்கு திமுக அரசுதான் காரணம். மருந்து விற்பனை தொடர்பாக லஞ்சம், ஊழல் நடக்கிறது. காலாவதியான மருந்துகளும் இருப்பதாக உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
உள்ளாட்சி அமைப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. உள்ளாட்சிக்கான மத்திய அரசின் நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை. உள்ளாட்சிப் பணிகளுக்கான நிதி மத்திய அரசு மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது. ஒரு திட்டத்தை நிறைவேற்றிய பிறகு அந்த திட்டத்திற்கான நிதியில் மீதி இருக்கும் உபரி நிதியை பிற பணிகளுக்கு உள்ளாட்சியில் பயன்படுத்துவார்கள்.