தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம்: பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்குச் சட்டம் இயற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

By

Published : Mar 21, 2020, 3:25 PM IST

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்த முதலமைச்சர், “நீட் தேர்வை அறிமுகப்படுத்திய பிறகு, அத்தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இந்த நிலை வரும் ஆண்டுகளில் தொடரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உச்ச நீதிமன்றத்தில் அரசு சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றது. இது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் ஆகியவற்றில், ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற அரசு பரிசீலித்து வருகிறது.

இச்சட்டத்தை இயற்றுவதற்கு வகை செய்ய ஏதுவாக தேவைப்படும் அனைத்து புள்ளி விவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வு பெற்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையத்தில், பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, சட்டம் ஆகிய துறைகளின் அரசுச் செயலாளர்களும், பள்ளிக் கல்வித் துறையினால் நியமிக்கப்படும் இரண்டு கல்வியாளர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். மருத்துவக் கல்வி இயக்குநர் இவ்வாணையத்தின் உறுப்பினர் - செயலராக செயல்படுவார்.

எடப்பாடி பழனிசாமி உரை

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் குறைந்த அளவிலேயே சேர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவர்களின் சமூக பொருளாதார நிலையினை மதிப்பீடு செய்து, இந்நிலையை சரி செய்ய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும். தனது பரிந்துரையை ஒரு மாத காலத்திற்குள் இவ்வாணையம் அரசுக்கு சமர்ப்பிக்கும்” என்று முதலமைச்சர் அறிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details