சென்னை:பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று இந்த ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடித்துக்கொண்டுள்ளனர். ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் நடுத்தெருவில் நிறுத்தி வருகிறார்கள்.
என்னுடைய ஆட்சியில் தைத்திருநாளுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் மற்றும் செங்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசும், 2023ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்குவார்கள் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (டிச.22) இந்த விடியா திமுக அரசு, பொங்கல் தொகுப்பு குறித்து அறிவித்த அரசு செய்திக் குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் என்றாலே மக்களின் நினைவிற்கு வருவது செங்கரும்பு தான்.