சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு விரைந்து நிவாரண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பெய்துவரும் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆறுகளும், அணைகளும், நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளநீர் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதுவரை நிரம்பாத பாபநாசம், சேர்வலாறு,
மணிமுத்தாறு அணைகள் நேற்று ஒருநாளில் பெய்த மழையில் முழுகொள்ளளவை எட்டி, வெள்ளநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், மழை வெள்ளநீரும் அனைத்துப் பகுதிகளிலும் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வெளியே வரமுடியாமல் அவதியுறுவதாகவும், பொது போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
நான்கு மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 25 செ.மீ., மேல் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணத்தில் இன்று காலை 10 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 96 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், பெரும்பாலான இடங்களில் 25 முதல் 50 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி தொடர்வதாகவும், இதன் காரணமாக தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.