சென்னை:சென்னை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரி உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களிலும், அதேபோல் தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் முன்னா, இன்னாள் அரசுத்துறை அதிகாரிகள் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டையில் நடந்த சோதனை:அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்திரன். இவர் தமிழகம் முழுவதும் 15 வருடத்திற்கு மேலாக அரசு மணல் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர், பால் உற்பத்தி நிலையம், கல்லூரிகள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 2016 - 2017 ஆண்டுகளில் சட்டத்திற்கு விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக அப்போது அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று காலை முதல் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள சமுத்திர அப்பார்ட்மெண்ட் அருகே உள்ள அவரது நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்பு நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறதா அல்லது தற்போது சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட புது வழக்கா என்பது அமலாக்கத் துறையின் அறிவிப்பிற்கு பிறகுதான் தெரிய வரும் என கூறப்படுகிறது.
அதேபோல் புதுக்கோட்டை அடுத்த அறந்தாங்கி சாலையில் உள்ள முத்துப்பட்டினம் கிராமத்தில் உள்ள எஸ்.ராமச்சந்திரனின் சொந்த வீடு, கந்தர்வகோட்டை அருகே உள்ள அவருக்குச் சொந்தமான கல்குவாரி ஆகிய இடங்களிலும், எஸ்.ராமச்சந்திரனின் உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.