மதுரை: அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி-யிடம் அமலாக்கத்துறை புகார் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ்பாபு மீது 2018ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்த நிலையில், வழக்கை அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு வழக்கில் இருந்து விடுவிக்க, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக இதற்கு மருத்துவர் ஒப்புதல் தெரிவிக்காத நிலையில், இறுதியாக 51 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டு, முதல் தவணையாக 20 லட்ச ரூபாயை மருத்துவர் கொடுத்ததாக கூறப்படுகிறது. மீதித் தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும் என அங்கித்திவாரி அவரை அவசரப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவர் சுரேஷ்பாபு கடந்த நவம்பர் 30ஆம் தேதி அன்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்க, போலிசாரின் அறிவுறுத்தல்படி சுரேஷ்குமார் கொடுக்க வேண்டிய மீத பணத்தை வாங்கிய போது வருமானவரித்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம், அங்கித் திவாரியின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலிசார் மற்றும் இந்தோ-திபெத் துணை ராணுவ படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.