சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஈடுபட்டதாக கூறி அவருக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது சகோதரர் இல்லம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தியது. சோதனையின் முடிவில் பல்வேறு கோப்புகள் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 பேருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் சுமார் 20 பேர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை விளக்கமாக அளித்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சுமார் நான்கு முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் அசோக் குமாருக்கு சமன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நேற்று மாலை கேரளா மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. இதனையடுத்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், கொச்சியில் கைது செய்யப்படவில்லை என்றும், நான்கு முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகி தனது விளக்கத்தை அளிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அசோக் குமார் மனைவி நிர்மலா மற்றும் நிர்மலாவின் தாயார் லட்சுமி ஆகியோருக்கும் அமலாக்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளதாகவும், அவர்களும் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு... காரணம் தெரியுமா?