தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூழலைப் பாதுகாக்கும் 'ஜீரோ வேஸ்ட்' கடை! - மயிலாப்பூர் ஜீரோ வேஸ்ட் கடை

சென்னையைச் சேர்ந்த கடை ஒன்று முழுக்க முழுக்க நெகிழி இல்லாமலும் குப்பைக் கழிவுகளை உருவாக்காமலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நடத்தப்படுகிறது.

Ecoindian
Ecoindian

By

Published : Dec 5, 2019, 2:30 PM IST

Updated : Dec 6, 2019, 8:13 PM IST

பரபரப்பான சென்னை நகரின் நடுவே மயிலாப்பூரில் எகோ இந்தியன் என்னும் பெயரில் ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பலசரக்கு பொருள்கள் விற்பனை செய்யும் கடை இயங்கிவருகிறது. இங்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சிறுதானியங்கள், ரசாயனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அரிசி, பருப்பு வகைகள், மரச்செக்கு எண்ணெய், மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் செய்யப்பட்ட எழுதுகோள் என சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடைசெய்யப்பட்டிருந்தாலும் பைகள் தவிர்த்து, உணவுப் பொருள்கள் மூடப்படும் நெகிழிக் கவர்கள், நெகிழி பாட்டில்கள், நெகிழியால் செய்யப்பட்ட இதர பொருள்கள் என நமது அன்றாட வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் பல இடங்களில் நெகிழியைப் பயன்படுத்துகிறோம்.

இவற்றுக்கு மாற்றாக பாரம்பரிய பொருள்களைப் பயன்படுத்துவதும், முடிந்தவரையில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவதும்தான் இந்தக் கடையின் சிறம்பம்சம். நெகிழிக்கு மாற்றாக கண்ணாடி பாட்டில்களில் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வைப்புத்தொகை செலுத்திவிட்டு பாட்டில்களில் எண்ணெயை வாங்கும் வாடிக்கையாளர்கள், பாட்டில்களைத் திரும்பச் செலுத்தி அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வீட்டிலிருந்தே துணி பை, பாட்டில்கள் கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு பொருள்களின் விலையில் ஐந்து விழுக்காடுவரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதன்மூலம் மறுசூழற்சி செய்யப்படுவதற்கு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதாகக் கூறுகிறார் கடையின் உரிமையாளர் பிரேம். இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், "ஆர்கானிக் பொருள்களை விற்பனை செய்யும்போது நெகிழிப் பயன்படுத்துவது நெருடலாக இருந்தது. அப்போதுதான் நெகிழி இல்லாத சில்லறை விற்பனை கடையைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பின் கடை முழுவதும் பாரம்பரியம் சார்ந்த இயற்கைக்கு உகந்த பொருள்களை விற்பனை செய்யத் தொடங்கினோம்" என்று கூறுகிறார்.

இரண்டு வருட உழைப்பை கொடுத்து அவர் உருவாக்கியுள்ள இந்தக் கடையில் மக்கள் ஆர்வத்துடன் தேடிவந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். தனியாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தும் அவருக்கு, இந்தக் கடை மூலம் பெரிய அளவுக்கு வருவாய் கிடைக்கவில்லை என்றாலும் மனதுக்கு நெருக்கமாக இருப்பதால் இதனை செய்வதாகவும் வாடிக்கையாளர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரிப்பதால் இனிவரும் நாள்களில் நிலைமை மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அதேபோல், இந்தக் கடையில் உள்ளூரில் விளைவிக்கப்பட்ட பொருள்களே அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள் பலனடைவதோடு, நீண்ட தூரத்திலிருந்து பொருள்கள் எடுத்து வரப்படுவதால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என்றும், பேக்கேஜில் நெகிழிப் பயன்பாடு குறையும் என்றும் தனது காரணத்தை விளக்குகிறார்.

சாதாரண கடைகளில் பைகளில் அடைத்து விற்பனை செய்யும் அனைத்து பொருள்களும் இங்கு பாட்டில்களில் அடைத்தே வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவை எடை போடப்பட்டு காகிதப்பைகள், துணிப் பைகளில் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற நெகிழிப் பயன்பாடற்ற, இயற்கைக்கு நெருக்கமான வாழ்க்கை முறை, மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியது கிடையாது என்று கூறும் பிரேம், இதுபோல் பலராலும் கடை நடத்த முடியும் என விருப்பமுள்ளவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். மேலும் இந்த நடைமுறையை பின்பற்றி நிலையான வருவாயை ஈட்ட முடியும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

சூழலைப் பாதுகாக்கும் 'ஜீரோ வேஸ்ட்' கடை

நெகிழி, தேவையற்ற கழிவுகளைத் தவிர்த்து ஜீரோ வேஸ்ட் கடையை நடத்துவதால் இயற்கையை பாதுகாக்க கடைக்காரர், வாடிக்கையாளர்கள் என இரண்டு தரப்பினரும் தங்களின் பங்கை ஆற்றுகின்றனர். இதனைப் பின்பற்றி பலரும் பூமியை குளிர்விக்க வேண்டும். வாருங்கள் மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்!

இதையும் படிங்க: தரமான கல்வியை அளிப்பது குறித்து ஆய்வு - பள்ளிக்கல்வித்துறை

Last Updated : Dec 6, 2019, 8:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details