தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

K Palaniswami: அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து பதிவு.. தேர்தல் ஆணைய முடிவால் ஈபிஎஸ் தரப்பு கொண்டாட்டம்!

அஇஅதிமுக நிர்வாகிகள் தேர்வுகள் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கடிதத்தை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 11, 2023, 11:59 AM IST

Updated : Jul 11, 2023, 7:00 PM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதே பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்ஸிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றமும், பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களை கடந்த மார்ச் 31ஆம் தேதி ஈபிஎஸ் தரப்பினர் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர். இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதிமுகவின் சட்ட விதிகள் திருத்தம், நிர்வாகிகள் நீக்கம் போன்றவற்றை ஏற்றதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நீதிமன்றங்களில் தொடர் ஏமாற்றங்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பிற்கு இந்திய தேர்தல் ஆணையம் இறுதி நம்பிக்கையாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த விவகாரம் ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதி அமர்வில் நடைபெற்று வருகிறது.

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில் இது உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என கூறியிருந்தது. இந்த நிலையில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

அது மட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமி நியமித்த நிர்வாகிகளையும் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம் தற்போது அவர் நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரித்துள்ளதால் அவரது தரப்பினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழங்கு நடைபெற்று வந்தாலும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என பதிவேற்றம் செய்தது ஓபிஎஸ்சிற்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஒருபுறம் அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறுபுறம் பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரண்டு தரப்பிற்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறன. உயர்நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை இது போன்ற குழப்பங்கள் தொடரும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Last Updated : Jul 11, 2023, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details