சென்னை:முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில், 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த மனு நீதிபதி A.D.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (நவ. 22) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரதாப் ஆஜாராகி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது இதே முறைகேடு தொடர்பாக ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்யும் டெண்டர் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் விவரங்களை அவர்களின் முகவரியோடு வழங்குமாறு தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.