சென்னை:நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த வெள்ள தடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் உள்ள தெற்கு பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள வீராங்கல் ஓடை, ஆலந்தூர் பகுதிக்குட்ப்பட்ட வானுவம்பேட்டை காந்தி தெரு, பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி, கீழ்கட்டளை, மற்றும் போரூர் பகுதிகளில் நடைபெற்று வந்த தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை விரைந்து முடிக்க கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "கடந்த 25 நாட்களாக வெள்ளத்தடிப்பு பணிகள் அனைத்து இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் இப்பணிகளை மும்முரமாக செயல்படுத்தி வருகின்றனர். அதனடிப்படையில் பல இடங்களில் 95% வெள்ளத் தடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. சில இடங்களில் 90 சதவீத வேலைகள் நிறைவடைந்துள்ளது.
இன்னும் மீதமுள்ள பணிகளை 5 நாட்களுக்குள் முடித்து விட வேண்டும். சில பணிகளை 10லிருந்து 15 நாட்களுக்குள் முடித்து விட வேண்டும். அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும் என்பதால் நானும் பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்து வருகிறேன். மாவட்ட ஆட்சியர்களும் இதன் செயலாளர்களும் உன்னிப்பாக கவனித்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு வெள்ளம் எங்கேயும் இருக்காது. அதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தால் வெள்ளநீர் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விடும்.