தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் கோ.வி. செழியன், போக்குவரத்துத் துறையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சிற்றுந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்து கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், போக்குவரத்துத் துறை கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் சிற்றுந்து திட்டம் தேவையில்லாத ஒன்றும் எனவும் பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ‘கிராமங்களின் உட்பகுதிகளில், மிகவும் குறுகலான சாலைகள் உள்ளன. அதில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாது. அதன் காரணமாகவே சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த வகை சேவை, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பதால், இதை செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
போக்குவரத்துத் துறை லாபத்தில் இயங்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. இந்தத் துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது. சேவை மனப்பான்மை அடிப்படையில்தான் இந்தத் துறையை இயக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக ஆட்சியிலும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி, தொடர்ந்து நிதி நெருக்கடியில்தான் போக்குவரத்துத் துறை இயங்கிவருகிறது. அரசு, அவ்வப்போது போதிய நிதியை வழங்கி, நெருக்கடியில் இருந்து மீட்கிறது எனவும், லாப நோக்குடன் இல்லாமல், சேவை நோக்குடன்தான் போக்குவரத்துத் துறை இயங்கிவருவதாக விளக்கமளித்தார்.