சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) இரவு 11 மணியிலிருந்து இன்று அதிகாலை வரை பலத்த காற்று, இடி மின்னலுடன், கனமழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்பட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதன்காரணமாக, சென்னை விமானநிலையத்திற்கு துபாய், சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து வந்த 2 பயணிகள் விமானங்கள், துருக்கி நாட்டிலிருந்து வந்த சரக்கு விமானம் ஆகிய 3 விமானங்கள் பலத்த மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் சென்னையில் இருந்து தோகா, துபாய், லண்டன், சார்ஜா, மற்றும் அந்தமான் புறப்பட வேண்டிய சுமார் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
குறிப்பாக, சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை 3:40 மணியளவில் 168 பயணிகளுடன் வந்த ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் துபாயிலிருந்து அதிகாலை 3:50 மணியளவில் 238 பயணிகளுடன் வந்த ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் மழை காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் விமானத்தை சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பெங்களூருக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க:ஃபோன்பே ஸ்மார்ட் ஸ்பீக்கரில் இனி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள்!
மேலும் சிங்கப்பூரில் இருந்து 269 பயணிகளுடன் வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இருந்து 286 பயணிகளுடன் வந்த ஏர்பிரான்ஸ் விமானம் மற்றும் திருச்சி, ஐதராபாத் நகரங்களில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் என மொத்தம் 4 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தன.
சிறிது நேரத்திற்கு பிறகு இந்த 4 விமானங்களும் சென்னை விமான நிலையத்தில் தாமதமாக தரையிறங்கின.அதோடு பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்ட லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை 2.50 மணியளவில் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்து தரையிறங்கியது.
மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூர், பாங்காக், ஹாங்காங், சிங்கப்பூர், பாரீஸ், பிராங்க்பர்ட், இலங்கை உள்பட 8 சர்வதேச விமானங்கள் மழை காரணமாக நீண்ட நேர தாமதத்துக்குப் பிறகு புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதம், விமானிகளின் திடீர் விடுப்பு உள்பட பல்வேறு காரணங்களால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மெட்டா சிஇஒ மார்க் ஜுக்கர்போர்க் பயன்படுத்தும் செல்போன் இதுவா? இணையத்தை கலக்கும் செல்போனின் தகவல்கள்!