தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் தொடர்கதையாகி வரும் போதைப்பொருள் கடத்தல்! - drugs smuggling

சென்னை: கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, வெளிநாடுகளிலிருந்து வரும் சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது தொடர் கதையாகி வருவதாக சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Drug trafficking at the Chennai airport is a serial
Drug trafficking at the Chennai airport is a serial

By

Published : Aug 13, 2020, 4:16 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் பல்வேறு கட்ட ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் அனைத்து விதமான உள்நாட்டு, பன்னாட்டு போக்குவரத்துகளும் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் படிக்கும் மற்றும் பணிபுரிந்து வரும் இந்தியர்களை, தாய் நாட்டிற்கு அழைத்து வர 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் பன்னாட்டு சரக்கு விமானங்களின் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பார்கள், கிளப்கள் மூடப்பட்டிருப்பதால், ஒரு சிலர் சரக்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள்களை கடத்தி வருவது அதிகரித்துள்ளதாக சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக தென் இந்தியாவின் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளுக்கு வரும் சரக்கு விமானங்களில், மருந்துப் பொருட்கள் என வரும் பார்சல்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

போதை மாத்திரைகள்


இதில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னை விமானநிலையத்திற்கு 8 பார்சல்கள் வந்துள்ளன. அவற்றை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் உயர் ரக கஞ்சாபொருட்கள் உருண்டைகளாக மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 700 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள்கள்
அதேபோல் ஜூன் மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் மருந்துப் பொருட்கள் என்று வரும் பார்சல்கள் மீது சந்தேகப்பட்டு சோதனை செய்ததில் மஞ்சள், சிவப்பு, வெண்மை ஆகிய நிறங்களில் 770 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். அவை அனைத்தும் மெத்தோ கட்டமீன் போதை மாத்திரைகள் எனவும், இவ்வகை மாத்திரைகள் அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதையும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பல நிறங்களைக் கொண்ட போதை மாத்திரைகள்
அதேபோல் ஜூலை மாதத்தில் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து போதை மாத்திரைகள் சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வருவது அதிகரித்திருந்தது. ஜூலை மாதத்தில் மட்டும் நான்கு முறை சென்னை விமான நிலையத்திற்கு நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து மருந்துப் பொருட்கள் என்று குறிப்பிட்டு வரும் பார்சல்களில், லம்போர்கினி, மெத்தோ கட்டமீன், எக்ஸ்டஸி போன்ற வகைகளைச் சார்ந்த 1,049 போதை மாத்திரைகளையும், எம்.டி.எம்.ஏ வகை போதைப்பொருள்களையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
எலும்புக்கூடு முத்திரைக் கொண்ட போதை மாத்திரைகள்
அதேபோல் நேற்று (ஆகஸ்ட் 12) சென்னை விமான நிலையத்திற்கு ஜெர்மனி, நெதர்லாந்து நாட்டிலிருந்து சரக்கு விமானம் மூலம் வந்த நான்கு பார்சல்களில் 5,210 எக்ஸ்டஸி போதை மாத்திரைகளும், 100 கிராம் மெத் பவுடர் போதைப்பொருளையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
போதை மிட்டாய்கள்


இதையடுத்து போதை மாத்திரைகள் வந்த பார்சகளில் இருக்கும் முகவரிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில், அவற்றில் அதிகபட்சமாக போலி முகவரிகளைக் கொண்டு, போதைப்பொருள்கள் வர வைத்திருப்பதும் தெரியவந்தது. இருப்பினும், ஒரு சில போதை ஆசாமிகள் சிக்கியுள்ளதாகவும் சுங்கத்துறை அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இணையதளத்தைப் பயன்படுத்தி சிலர் வெளிநாடுகளிலிருந்து போதை மாத்திரைகளை சென்னைக்கு வர வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

போதை மாத்திரைகள்
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பார்கள், கிளப்கள் ஆகியவற்றை மூடி இருப்பதால் சில இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், இவ்வகை போதை மாத்திரைகள் கிளப்கள், பப்புகள் போன்ற இடங்களில் அதிகளவு பயன்படுத்தப்படுவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொடர் கதையாகி வரும் போதைப்பொருள் கடத்தல்
மேலும் மார்ச் மாதம் முதல் தற்போது வரை, சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ள போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 2.69 கோடி ரூபாய் என்றும்; சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் பன்னாட்டு விமான சேவை தொடங்கப்படாத நிலையில், சரக்கு விமானங்களில் மருந்துப் பொருட்கள் என போதைப்பொருள்களை கடத்தி வருவது சுங்கத்துறை அலுவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் ரூ.1.65 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details