தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: விவசாயிகள் முதல் ராணுவ வீரர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் ட்ரோன்கள்..!

TN World Investor Meet Drone: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற மேஜிக் மைனா என்ற தனியார் நிறுவனம், அதன் தயாரிப்புகளை காட்சிபடுத்தியது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிறுவனத்தின் உதவியாளர், ராணுவம், மருத்துவம் போன்ற துறைகளில் ட்ரோனின் பயன்பாடு அதிகளவில் இருப்பதனால் அதற்கான சரியான வழிமுறையை அரசு நெறிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு பங்கேற்ற தனியார் நிறுவனம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு பங்கேற்ற தனியார் நிறுவனம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 9:57 PM IST

உலக முதலீட்டாளர்கள் மாநாடு பங்கேற்ற தனியார் நிறுவனம்

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று (ஜன.7) தொடங்கியது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய தொழில் வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

மேலும், பல நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு நிறுவனத்தைச் சார்ந்த பல தரப்பட்ட மக்கள் வருவார்கள் என்பதனால் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுப் பல தனியார் நிறுவனங்கள் தயாரித்த தயாரிப்பு பொருட்களையும் வரும் காலங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடிய தயாரிப்பு பொருள்களின் மாதிரிகளையும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்.

இதில், மேஜிக் மைனா என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள ட்ரோன்கள் வெகுவாக மக்களைக் கவர்ந்தது. குறிப்பாக விவசாயம், காவல்துறை, ராணுவம் மற்றும் காவல்துறைக்குப் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ட்ரோன்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் விவசாயத்திற்குப் பயன்படுகின்ற ஒரு ட்ரோன் வகையும், ராணுவத்திற்கு மற்றும் மருத்துவத்துறைக்குப் பயன்படுகின்ற மற்றொரு டிரோனும் மக்களைக் கவர்ந்தது.

இது குறித்து, மேஜிக் மைனா என்ற தனியார் நிறுவனத்தின் உதவியாளர் கூறுகையில், "குறிப்பாக ராணுவத்திற்குப் பயன்படுகின்ற ட்ரோன் வகை ராணுவ வீரர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும், மருத்துவத்துறையில் மனிதர்களுடைய உடல் உள்ளுறுப்புகளை மருத்துவ தேவைக்காக எடுத்துச் செல்ல பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ட்ரோன் பயன்பாடு பல இடங்களில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் கூட, குறிப்பிட்ட சில இடங்களில் ட்ரோன்களை பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் அரசு விதித்துள்ளது. இது போன்ற கட்டுப்பாடுகளில் திருத்தங்களைக் கொண்டு வந்தால் விவசாயிகள் முதல் ராணுவம் வரையில் ட்ரோன்களை பயன்படுத்தக்கூடிய சில முக்கியமான வேலைகளுக்குப் பயன்படுத்த முடியும்.

மேலும், சாலை போக்குவரத்தைக் காட்டிலும் வான்வழிப் போக்குவரத்து என்பது சில கிலோமீட்டர்களை விரைவாகச் சென்றடைய முடியும். அதனால் ட்ரோன் பயன்பாட்டில் உள்ள கட்டுப்பாடுகளை எளிமையானதாக மாற்ற வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள்: மாலத்தீவு வெளியுறவுத் துறை விளக்கம்..

ABOUT THE AUTHOR

...view details