சென்னை:துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் விமானங்கள் மூலம் சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்படுவதாகவும், அந்தத் தங்கத்தை விமான நிலைய ஊழியர்கள் சிலர் ரகசியமாக வெளியில் எடுத்துச் செல்வதாகவும் சென்னை தியாகராய நகரில் உள்ள டி.ஆர்.ஐ-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலில் பேரில் தனிப்படை அமைத்த டி.ஆர்.ஐ அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களைத் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் பெண் ஊழியர்களான சினேகா (30) மற்றும் சங்கீதா (28) ஆகிய இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இரு பெண்களும் பணி முடிந்து, வீடுகளுக்குச் சென்ற போது, அவர்களை ரகசியமாகப் பின் தொடர்ந்த அதிகாரிகள், அதில் ஒரு பெண் வீடு பல்லாவரத்திலும், மற்றொரு பெண் வீடு குரோம்பேட்டையிலும் இருந்ததால், இரு குழுவாகப் பிரிந்து அவர்களது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி உள்ளனர்.
அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள், தங்க உருளைகள் போன்ற 4.7 கிலோ தங்கம் கைப்பற்றபட்டுள்ளது. இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணிகள் விமானங்களில் கடத்தி வரும் தங்கத்தை, உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து தங்களுடைய வீட்டில் வைத்து விடுவதாகவும், இதன் பின் கடத்தல் கும்பலின் ஏஜெண்டுகள் வந்து, தங்களிடம் இருந்து தங்கத்தை வாங்கிச் செல்வார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.