சென்னை:மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி முதல் இனக்கலவரம் நடந்து வருகிறது. இதில், குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலவரங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் கலவரக்காரர்கள் இரண்டு குக்கி சமூக பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, இன்று (ஜூலை 26) சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகில் திராவிடர் கழகத்தின் மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத்தின் பிரசார செயலாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி, "இந்தியாவை வளரவிடாமல் பாஜக அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது. இந்திய நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. கடந்த 70 நாட்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் இதுவரை மௌனம் காப்பது ஏன்? - மணிப்பூரில் இரண்டு பழங்குடி பெண்களுக்கு நடைபெற்ற தீங்கிற்கு எந்த ஒரு தீர்வும் இல்லை.
இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று மணிப்பூர் மாநில அரசு பதவி விலக வேண்டும். காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், மாநில அரசு என அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும். மாநில அரசு பதவி விலகுவதோடு மட்டுமல்லாமல், அந்த மாநிலத்தின் முதல்வருக்கும் தண்டனை வழங்க வேண்டும்.
இரண்டு மாத காலமாக அங்கு மக்கள் சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் இதுதான் நிலைமை என்று மணிப்பூர் இன்று உதாரணமாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பிரதமர் அஞ்சுகிறார். இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர்கள்!