இதுதொடர்பாக சமூக சமத்துவத்தற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பது சரியா? தங்களின் மதவாத, சாதிய நோக்கங்களை, அரசியலை வென்றெடுப்பதற்கு பெண்களை பகடைக் காய்களாக மாற்றுவது சரியல்ல. சில சக்திகள் தொடர்ந்து அவ்வாறு முயல்கின்றன.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் அத்தகையது தான்.
பெண்களின், ஆண்களின் திருமணம் வயதை இனி மேலும் சட்ட ரீதியாக உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. அது பல்வேறு மோசமான சமூக, பண்பாட்டு விளைவுகளையே உருவாக்கும். மோசமான கலாச்சார மாற்றங்களுக்கும் வழி வகுக்கும். 18 வயதை கடந்த உயர் கல்வி பயிலும் பெண்கள் யாரும் இப்பொழுது உடனடியாக திருமணம் செய்து கொள்வதில்லை.
ஆண்களை போன்றே லட்சிய உணர்வோடு, வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு பெண்களும் உழைக்கின்றனர்;முன்னேறுகின்றனர்;சாதிக்கின்றனர். தாங்களகாவே முன்வந்து தங்களின் திருமணங்களை தள்ளிப்போடுகின்றனர்.
இது பல நாடுகளில் மோசமான நிலையை எட்டியுள்ளது. 30 வயதுக்கும் மேலும், பல வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். குழந்தைகளை பெற்றெடுக்க ஆர்வமின்றி உள்ளனர். முதலாளித்துவம் உருவாக்கும் சமூகப் பொருளாதார பாதுகாப்பின்மையே இதற்கும் மிக முக்கியக் காரணம்.
பெண்கள் 30 வயதிற்கு மேலும், திருமணம் செய்து கொள்ளாததால், குழந்தை பெற்றுக் கொள்ளாததால், அந்நாடுகளின் மக்கள் தொகை வீழ்ச்சி அடைகிறது. இது பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. அதானல், பெண்களை திருமணம் செய்து கொள்ள, குழந்தைகள் பெற்றுக் கொள்ள அரசுகளே ஊக்கப்படுத்துகின்றன. பெண்களின் சமூப் பொருளாதார கலாச்சார வாழ்வில் முற்போக்கான மாற்றங்களை செய்வதின் மூலம், இளம் வயது ( 18-21 வயது) திருமணங்களை அவர்களே தவிர்க்கும் நிலையை உருவாக்க முடியும்.
அதை விடுத்து சட்டரீதியாக திருமண வயதை உயர்த்துவது சரியல்ல. பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது அவர்களின் ஹார்மோன்கள் தான் என்பது பெண்களை கொச்சைப் படுத்துவதாகும். அவர்களை இதை விட மோசமாக சிறுமைப்படுத்த முடியாது.
பெண்களுக்கு முடிவெடுக்கும் திறன் இல்லை. அதற்குக் காரணம் பெண்களின் ஹார்மோன்கள் என ஹார்மோன்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல. பெண்களின் இளம் வயது திருமணம் ஒரு சமூகப் பொருளாதார பிரச்சனை. அவர்கள் படிப்பை நிறுத்துவதும் சமூகப் பொருளாதாரப்பிரச்னை.