சென்னை:நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் எம்.கே.ராஜ்குமார் என்ற விவசாயி உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் ராஜ்குமாரின் நிலையில் தான் உள்ளனர். ராஜ்குமார் மொத்தம் 50 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் குறுவை சாகுபடி செய்துள்ளார்.
அதற்காக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். நடவு நட்டு 80 நாட்கள் ஆன நிலையில் கதிர் பிடிக்க வேண்டிய பயிர்கள் கருகத் தொடங்கியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் அவர் அதிர்ச்சியில் உயிரிழந்திருக்கிறார். பெரிய விவசாயியான ராஜ்குமாரின் நிலைமையே இப்படி என்றால் கடன் வாங்கி ஓரிரு ஏக்கரில் பயிர் செய்து பாதிக்கப்பட்டவர்களின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தர வேண்டிய கடமையை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு அரசு பெரும் தோல்வி அடைந்து விட்டது. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்நாடு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.