சென்னை:கடந்த ஆண்டில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மாடுகள் பொதுமக்களை தாக்குவது, தெருநாய்கள் கடித்து ரேபிஸ் தொற்றுக்கு ஆளாவது போன்று கால்நடைகளால் பல்வேறு பிரச்னைகள் மக்களுக்கு ஏற்பட்டது. இதனைத் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களின் வருகை பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக, சமீப காலமாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதாலும், ஆக்ரோஷமாக இருப்பதாலும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், விமான நிலைய ஊழியா்கள், பாதுகாவலா்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளையும், அவ்வப்போது இந்த தெரு நாய்கள் விரட்டும் சம்பவங்களும் நடக்கின்றன. இது வெளிநாட்டுப் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விமான நிலைய நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நாய்களைப் பிடித்துச் செல்ல புளுகிராஸ் அமைப்பினர், நாய்கள் மீண்டும் இனவிருத்தி செய்ய முடியாதபடி அறுவை சிகிச்சை செய்து, அடுத்த சில நாட்களில் இப்பகுதியில் கொண்டு வந்து விடுகின்றனர். இதனால் இந்த நாய்கள் இப்பகுதியிலேயே சுற்றுகின்றன. எனவே, நாய்களை முழுமையாக தடை செய்ய, மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கடலூர் பணிமனையில் இருதரப்பு ஊழியர்கள் இடையே தள்ளுமுள்ளு.. 20 சதவீத பேருந்துகளே இயக்கம்!