இதுகுறித்து கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று 170 நாடுகளில் பரவியதோடு, 7 லட்சம் பேரை பாதித்துள்ளது. இதுவரை 31 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டு 32 பேர் பலியாயிருக்கிறார்கள். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74. நேற்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
வரலாறு காணாத வகையில் கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்துவருகிறது. இதனால் ஏற்படப்போகிற விளைவுகள் குறித்து மிகுந்த தீவிரத் தன்மையோடு இப்பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் அணுகியதா என்பதை ஆய்வு செய்கிறபோது மிகுந்த வேதனைதான்மிஞ்சுகிறது.
முந்தைய ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் சீனாவில் வூஹான் நகரத்தில் பெருந்தொற்று நோய்பாதிப்புகள் குறித்து செய்திகள் வெளிவந்தன. ஜனவரி 7ஆம் தேதி முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. ஜனவரி 25ஆம் தேதி 56 மில்லியன் மக்கள் பெருந்தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இறுதியாக, பிப்ரவரி 29ஆம் தேதி 3 ஆயிரத்து 150 பேர் உயிரை பறிகொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு சீனாவில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல்தடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மக்கள் தொகையை ஒத்த அளவிலான சீன நாட்டில் நிகழ்ந்த கரோனா வைரஸ் உயிரிழப்புகளை பார்த்த பிறகு இந்திய அரசு விழித்துக்கொண்டு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மார்ச் 4 ஆம் நாள் தான் வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வருகிற பயணிகளை பரிசோதிக்கிற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் அனைத்து சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்கு வருகை புரிவதை தடை விதித்தது. இந்நிலையில், மார்ச் 24 ஆம் தேதி 21 நாள் ஊரடங்கை நரேந்திர மோடி அறிவித்தார். இத்தகைய அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. அனைத்து தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், சிறு, குறு தொழில்கள், உணவகங்கள் என அனைத்து துறைகளும் மூடப்பட்டன.
இந்தியாவில் ஏறத்தாழ 43 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். 90 சதவீத வேலைகள் இவர்களை கொண்டுதான் நடக்கிறது. 21 நாள் ஊரடங்கினால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை மத்திய அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.
நாடு முழுவதும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் 14 கோடி பேர் உள்ளனர். ஊரடங்கு அறிவிப்பினால் வேலைவாய்ப்பிழந்து உணவு கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியிலிருந்து சொந்த ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்கிற நிலைஏற்பட்டுள்ளது.
தோளில் குழந்தைகளை சுமந்துகொண்டு தலையில் மூட்டை முடிச்சுகளுடன் டெல்லியிலிருந்து நொய்டா வழியாக யமுனா நெடுஞ்சாலையில் ஹரியாணா, உத்தரப் பிரதேசம், பிஹார் மாநிலங்களை நோக்கி நடத்து செல்கிற காட்சியைப் பார்க்கிறபோது பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் ஏற்பட்ட கொடூர சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.
இந்த அவலநிலையை நரேந்திர மோடியால் எப்படி பார்த்து சகித்துக்கொள்ள முடிகிறது? இதை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு அவர்களுக்கு தங்குமிடத்தையும், உணவையும் மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா?
அதற்கு மாறாக மத்திய அமைச்சர் ஜவடேகர் சாவகாசமாக எந்த சலனமும் இல்லாமல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரை பார்த்து ரசித்துக் களிப்படைகிறார். நாடு தீப்பற்றி எரிந்தபோது ரோம் நாட்டு மன்னன் பிடில் வாசித்த கதை தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.