புகைப்பிடிக்கும் இளம் தலைமுறையினருக்கு நுரையீரல் அடைப்பு நோய் வரும்.. மருத்துவர்கள் எச்சரிக்கை சென்னை: உலகெங்கும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை தினத்தை முன்னிட்டு (World No Tobacco Day) புகையிலையின் அதீத தாக்கம் குறித்து மருத்துவர்கள் அதன் பயன்பாட்டை தவிர்க்க எச்சரிக்கைத் தெரிவித்துள்ளனர். அதில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுள் 15 சதவீதம் நபர்களுக்கு நாட்பட்ட 'நுரையீரல் அடைப்பு நோய்' (COPD) உருவாகிறது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். புகையிலை பயன்பாடும் மற்றும் புகைப்பிடித்தலும் அதிக தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை உருவாக்குகின்றன என்பது அறியப்பட்ட உண்மையே.
எனினும், புகையிலையின் மோசமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் குறைவாகவே இருக்கிறது. எனவே தான், இதன் மீதான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் மே 31ஆம் தேதியன்று ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு “எங்களுக்கு தேவை உணவு, புகையிலை அல்ல” என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ரேலா மருத்துவமனையின் நுரையீரலியல் தீவிர சிகிச்சை மற்றும் உறக்க மருத்துவம், நுரையீரல் இடையீட்டு சிகிச்சை மருத்துவர் பென்ஹர் ஜோயல் ஷத்ராக், கூறும்போது, “தற்போது நுரையீரல் நோய்களுக்கான ஒரு முக்கிய இடர்காரணிகளுள் ஒன்றாக மட்டும் புகைப்பிடித்தல் இருப்பதில்லை; இதயநாள நோய்களுக்கும் மற்றும் நுரையீரல்கள் குரல்வளை, கணையம், மார்பகம் மற்றும் கர்பப்பை ஆகியவை உட்பட உடலின் பல்வேறு உறுப்புகளில் உருவாகும் புற்றுநோய்க்கும் ஒரு காரணியாக இருப்பது அறியப்பட்டிருக்கிறது.
இந்த நோயாளிகளில் 80 சதவீதம் நபர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதை பார்க்கிறோம். அத்துடன், 90 சதவீதம் நபர்களுக்கு நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) பாதிப்பும் ஏற்படுகிறது. ஒரு ஆண்டில் எங்களிடம் சிகிச்சைக்காக வரும் நபர்களுள் ஏறக்குறைய 700 நபர்கள் நாட்பட்ட நுரையீரல் அடைப்புநோய் பாதிப்புடன் வருகின்றனர். இவர்களுள் 70 சதவீதத்தினருக்கு புகையிலை பயன்படுத்தும் அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது.
இந்த நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நோயாளிகளுள், 30 சதவீதம் நபர்கள் அவர்களுக்கு இருக்கும் கடுமையான நோயையும் பொருட்படுத்தாது, விடாமல் தொடர்ந்து புகை பிடிக்கின்றனர். ஆகவே, இத்தகைய நோயாளிகளை கண்காணிக்கவும், சிகிச்சையையும், உரிய ஆலோசனையையும் வழங்குவதற்கு புகைப்பிடித்தலுக்கு எதிரான சிறப்பு கிளினிக்குகள் உருவாக்கப்படுவது அவசியமாக இருக்கிறது.
இவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்கான மனநல மருத்துவர்கள் மற்றும் ஆலோசனை வழங்கும் நிபுணர்களும் தேவைப்படுகின்றனர். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுள் 15 சதவீதம் நபர்களுக்கு நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உருவாகிறது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறிப்பாக புகைப்பிடிப்பவர்களிடம் அதிகரிக்கப்படுத்த வேண்டி உள்ளது” என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:நாங்களும் மனுஷங்க தானா....வேதனையில் மக்கள்: புழு பூச்சியுடன் ரேஷன் பொருட்கள் விநியோகம்!