சென்னை: மின்சாரம் தாக்கி இரண்டு கால்களையும் இழந்த இளைஞருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் சித்தாத்தூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் (19). 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மழை நேரத்தில், வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, குடையின் மேலுள்ள கம்பி தவறுதலாக மின்சார கம்பி மீது பட்டு விபத்துக்குள்ளானது. அதனால் ஏற்பட்ட மின்சார தீ விபத்தில் பிரதாப் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் அளிக்கப்பட்டது.
கால்களை இழந்த பிரதாப்
இந்த விபத்தில் தீவிர பாதிப்பு அடைந்த பிரதாப்பை காப்பாற்ற அவருடைய இரண்டு கால்களையும் முட்டிக்கு கீழ் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், கால்கள் நீக்கப்பட்டதால், இனி வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியை சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நம்பிக்கையூட்டிய மருத்துவர்கள்
இந்தச் சூழலில் நம்பிக்கையூட்டும் வகையில், பிரதாப் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மற்றும் மறுவாழ்வு துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டார். அவரின் இழந்த கால்களைப் பரிசோதித்து அதற்குரிய பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு இயன்முறை (பிசியோதெரபி) மருத்துவர்கள் முறைப்படி பயிற்சி அளித்தனர். மருத்துவர்களின் விடாமுயற்சியால், பிரதாப்பை நடக்கவைக்கத் தேவையான செயற்கைக்கால்கள் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கரோனாவை வென்று தன்னம்பிக்கையுடன் நடைபோடும் பிரதாப்