தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்கள் - தமிழ்நாடு அரசுக்கு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை! - today news

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர் இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் தமிழ்நாடு மாணவர்கள் சேர்வதை, தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்திட வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி ஆர் இரவீந்திரநாத்
டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி ஆர் இரவீந்திரநாத்

By

Published : Jul 26, 2023, 12:28 PM IST

சென்னை:அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் தமிழ்நாடு மாணவர்கள் சேர்வதை, தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்திட வேண்டும் என்றும், அகில இந்தியத் தொகுப்பு முறையை நிரந்தரமாக ஒழித்திட வேண்டும் என்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் செய்தி குறிப்பை வெளியிட்டு உள்ளார். அதில், “இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளும், அரசு மருத்துவ இடங்களும் இருந்த போதிலும் அவற்றை முழுமையாக தமிழ்நாடு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அகில இந்திய ஒதுக்கீட்டு (All India Quota) முறைக்கு 15 விழுக்காடு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் பறிக்கப்படுவதே இதற்குக் காரணம். அகில இந்திய தொகுப்பிற்கு நாம் ஏராளமான இடங்களை இழந்து வருகிறோம். இந்த ஆண்டில் ஏறத்தாழ 762 எம்பிபிஎஸ் இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு, நமது அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து வழங்குகிறோம். இது 7 மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுக்குச் சமம்.

அதேபோல், 37 பல் மருத்துவ இடங்களையும், நமது அரசு பல் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து, அகில இந்தியத் தொகுப்பிற்கு வழங்குகிறோம். இது தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைப் பெரிதும் பாதிக்கிறது. இந்த பாதிப்பிலிருத்து விடுபட,

  • தமிழ்நாட்டு மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ இடங்களை எடுத்திட தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்திட வேண்டும்.
  • அகில இந்திய தொகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்றிட வேண்டும்.
  • அகில இந்தியத் தொகுப்பிலிருந்து தமிழ்நாடு வெளியேற உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும்.
  • ஏற்கனவே இருந்தது போல் அகில இந்தியத் தொகுப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு, மாநில அரசுகள் கலந்தாய்வை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
  • நிரம்பாத தமிழ்நாட்டு அகில இந்தியத் தொகுப்பு இடங்களை, தமிழ்நாட்டிற்கு உடனடியாக திருப்பி வழங்கிட வேண்டும்.

மத்திய அரசு, மாநில அரசின் வேண்டுகோளை மதித்து இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக அகில இந்தியத் தொகுப்பு இடங்கள் தமிழ்நாட்டில் காலியாகப் போனதைப் போல் நிலைமைகள் உருவாகாமல் தடுக்க முடியும்.

பல்வேறு குழப்பங்களுக்கும், சிக்கல்களுக்கும், சீட் பிளாக்கிங் போன்ற முறைகேடுகளுக்கும், மாணவர் சேர்க்கை கால தாமதமாவதற்கும் காரணமான மாநில உரிமைகளுக்கும் எதிரான, அகில இந்தியத் தொகுப்பு முறையை இளநிலை, முதுநிலை, உயர், சிறப்பு மருத்துவ இடங்களில் மத்திய அரசு நிரந்தரமாக ஒழித்திட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு; பதிவு, முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details