சென்னை:வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெற்றதன் காரணமாக வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை உட்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கிய பிரச்னைகளின் காரணமாக, மாசுபட்ட நீரினால் பரவக்கூடிய கண் தொற்று நோய்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜனவரி 15ஆம் தேதி வரையில் முதியவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்படும் என டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அறிவித்துள்ளது. இதில், கண் மருத்துவர்களுடன் வெளிநோயாளிகளுக்கான கலந்தாலோசனைகள், சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு இலவச பரிசாேதனைகள் போன்றவற்றை அகர்வால் கண் மருத்துவமனை வழங்குகிறது.
50 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள சென்னை மாநகர மக்கள், அவர்களது பெயரை95949 24048 என்ற எண்ணில் முன்பதிவு செய்து, சென்னை நகரில் உள்ள 18 அகர்வால் கண் மருத்துவமனைகள் மற்றும் கண் சிகிச்சை கிளினிக்குகளுக்கு நேரில் சென்று இந்த இலவச சேவைகளை பயன்படுத்தி பயனடையலாம்.
பார்வைக்கூர்மை மதிப்பாய்வு, பார்வைத்திறனின் தெளிவு அல்லது கூர்திறன் மதிப்பீடு, கண்ணின் விழியடி பரிசோதனை, விழித்திரை பார்வை நரம்பு மற்றும் இரத்தநாளங்கள் உட்பட, கண்ணின் பின்பகுதி சோதனை, தானியக்க செயல்பாடாக ஒளிவிலகல் மதிப்பாய்வு, ஒரு நபரின் விலக்கப்பிழை அளவீடு, கண்களின் உட்புறத்திலுள்ள அழுத்தத்தை அளவிட தொடர்பற்ற நிலையில் மேற்கொள்ளப்படும் கண்அழுத்த அளவி (டோனோமெட்ரி) மதிப்பாய்வு மற்றும் கண்ணின் முன்புற மற்றும் பின்புற பகுதிகளின் விரிவான பரிசோதனைக்கான ஸ்லிட் லேம்ப் (Slit Lamp) சோதனை செய்யப்படும்.
இது குறித்து டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி கூறும்போது, “மழை காலத்தின் போதும், புயல், மழை வெள்ள நிகழ்வு ஏற்படும் போதும் கண் பராமரிப்பு மிக முக்கியமானது. மிக்ஜாம் புயலால் பெய்த மழை சென்னை முழுவதிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால், நீர் வழியாகப் பரவும் தொற்று நோய்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கான சாத்தியம் உருவாகும்.
சென்னை மாநகரில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்காக இலவச கண் பரிசோதனை மற்றும் பொதுப்படையான அனைத்து கண் பரிசோதனை சேவைகளை அறிவித்திருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் தொற்றுகள் வராமல் தடுப்பதற்கு கண்களுக்கு சிறந்த தூய்மைப் பராமரிப்பை செய்ய வேண்டும்.
கண் நோய்களை தடுப்பது எப்படி?மழைக் காலத்தின் போது மிக அதிகமாக விழிவெண்படல அழற்சி (சிவந்த கண்), கண்ணிமைச் சீழ்க்கட்டி, உலர் கண்கள் மற்றும் விழிப்படல புண்கள் ஆகியவை உருவாகின்றன.
- நீரில் நீந்தும் போதும், பயணம் மேற்கொள்ளும் போதும், காற்று மற்றும் தூசி கண்களை பாதிக்காமல் இருக்க, கண் பாதுகாப்பிற்கான கண்ணாடிகள், கண் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டும்.
- மழைக்காலத்தின் போது கண்களில் வைரஸ் தாக்குதலுக்கான இடர்வாய்ப்பை நீச்சல் குளத்திலுள்ள நீர் அதிகரிக்கக்கூடும். எனவே நீச்சல் குளங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- அழுக்கான மற்றும் மாசுபட்ட கைகளைக் கொண்டு கண்களை தொடுவதை அல்லது கண்களை அளவுக்கு அதிகமாக தேய்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- கைக்குட்டைகள் அல்லது டவல்களை பலரும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
- கண் தொற்று இருக்கும் காலத்தில், கண்களில் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- கண் பிரச்சனைகள் தோன்றும் போது சுய மருத்துவத்தை நாடக்கூடாது. கண் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை எப்போதும் கேட்டுப் பெறுவதே கண் பாதுகாப்பிற்கு சிறந்தது.
விழிவெண்படல அழற்சி:விழிவெண்படல அழற்சி (சிவந்த கண்) என்பது, வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் எரிச்சலூட்டும் பொருட்களினால் விழிவெண்படலத்தில் ஏற்படுகின்ற அழற்சியாகும். இதுவொரு தொற்றுநோய், ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவக்கூடியது.