தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 4, 2022, 10:25 PM IST

ETV Bharat / state

அதிகரித்து வரும் 'மெட்ராஸ் ஐ' - சுயமருத்துவம் செய்யாதீர்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னையில் அதிகரித்து வரும் மெட்ராஸ் ஐ-க்கு சுயமருத்துவம் செய்யாதீர்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

”மெட்ராஸ் ஐ-க்கு”  சுயமருத்துவம் செய்யக் கூடாது- மருத்துவர்கள் எச்சரிக்கை
”மெட்ராஸ் ஐ-க்கு” சுயமருத்துவம் செய்யக் கூடாது- மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் வழக்கம் போல் கோடைக்காலம் முடிவடைந்த பின்னர் மழைக்காலம் தொடங்கிய நிலையில் 'மெட்ராஸ் ஐ' நோய் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாவும், தனிமைப்படுத்திக்கொண்டால் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முடியும் எனவும், சுயமாக மருத்துவம் செய்யாமல், கண் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டும் என சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் பிரகாஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை எழும்பூர் கண் மருத்துமனையின் இயக்குநர் பிரகாஷ் கூறும்போது, 'மெட்ராஸ் ஐ பரவல் தற்பொழுது பரவத்தொடங்கியுள்ளது. இந்த கண் நோய் வைரஸ் கிருமியால் பரவும் தன்மைக்கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் முடிவடைந்து பருவ மழைக்காலம் தொடங்கும்போது மெட்ராஸ் ஐ பாதிப்பு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக, மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகளவில் கண்டறியப்படவில்லை.

கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக 'மெட்ராஸ் ஐ' பரவுகிறது. ஒரு நபர் அவரது கண்ணை தொடுவாரானால், தொற்றிப் பரவக்கூடிய வைரஸ் அல்லது பாக்டீரியாவை கண் சுரப்போடு தொடர்பு கொள்ளக்கூடிய வேறொரு நபருக்கு இத்தொற்று பரவும்.

இதன் அறிகுறிகளாக கண் எரிச்சல், நீர் வடிதல், கண் சிவத்தல், ஒட்டிக்கொள்கிறவாறு கண்ணிலிருந்து அழுக்கு வெளியேற்றம், வெளிச்சத்தைப் பார்க்க கூச்சம் மற்றும் கண்ணில் மணல் விழுந்தால் இருப்பதைப்போன்ற உறுத்தல் ஆகியவை இருக்கின்றன. சுயமாக மருந்துகளைப் பயன்படுத்துவதையும் ஓடிசி மருந்து என அழைக்கப்படும் கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிப்பதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டி- பயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த கண் நோய் 3 நாட்களில் தானாக சரியாகி விடும். அதுவரை தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. கைகளை நன்றாக சுத்தம் செய்தபின்னரே கண்களைத் தொட வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவின் மண்டலத்தலைவரும், முதுநிலை கண் மருத்துவருமான கலா தேவி கூறும்போது, ' “மெட்ராஸ் ஐ” என்று பிரபலமாக அழைக்கப்படும் கண் வெண்படல அழற்சி சென்னையில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் மத்தியில் இது வேகமாகப்பரவி வருகிறது. சமீப வாரங்களில் சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளிகளுள் 20 சதவீதத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கண் வெண்படல அழற்சி என்ற மெட்ராஸ் ஐ இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த நோய் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய்ப்பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது. கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண்படல அழற்சி பரவுகிறது. ஒவ்வாமையினால் ஏற்படும் கண் வெண்படல அழற்சி மற்றும் வேதிப்பொருட்கள் அல்லது எரிச்சலூட்டிகளினால் வரக்கூடிய கண் அழற்சி ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுவதில்லை.

ஆனால், கண்ணின் கறுப்பு நிற படலத்தின் மீதான அடுக்கான கருவிழியில் தொற்று இருக்குமானால், அதன் காரணமாக மங்கலான பார்வை ஏற்படக்கூடும். தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்ட இந்த வைரல் தொற்று, சில நோயாளிகள் மத்தியில் கண் வீக்கம் மற்றும் அழற்சியை ஏற்படுத்துகிறது. இப்பாதிப்புகள் குணமாவதற்கு அவர்களுக்கு நீண்டகாலம் எடுக்கிறது.

கண் வெண்படல அழற்சி என்பது, பொதுவாக ஒரு சிறிய கண் தொற்றாக இருக்கின்றபோதே அதை சரியான பரிசோதனையில் உறுதிசெய்து உடனடியாக சிகிச்சையளிக்காவிட்டால் அதிக தீவிரமான பிரச்னையாக அது மாறக்கூடும். சுயமாக மருந்துகளைப் பயன்படுத்துவதையும் ஓடிசி மருந்து என அழைக்கப்படும் கண் சொட்டு மருந்துகளையும் உபயோகிப்பதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

உரிய பரிசோதனை மற்றும் நோய் உறுதி செயல்பாட்டிற்குப்பிறகு கண் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஏறக்குறைய 90 விழுக்காடு மெட்ராஸ் ஐ அடினோவைரஸ் என்பதனால் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் கண் சிவந்து, அரிப்பும், எரிச்சல் தன்மையும் உள்ளதாக மாறுகிறது. கண்ணீரைப் போன்ற நீர்த்த சுரப்பு வெளியேற்றத்தை இது உருவாக்குகிறது. சில நபர்களிடம், ஒரு கண்ணிலிருந்து மற்றொரு கண்ணுக்கும் இது விரைவாகப் பரவுகிறது.

மெட்ராஸ் ஐ மிக அதிகமாகவும், வேகமாகவும் பரவக்கூடிய ஒரு தொற்றாகும். டவல்கள், தலையணை உறைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் போன்ற தனிப்பட்ட பொருட்களின் வழியாகத்தான் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு இது எளிதாகப் பரவக்கூடியது. ஆகவே, இந்த தொற்றுப்பாதிப்புள்ள நபரை தனிமைப்படுத்துதல் முக்கியமானது.

அதிகரித்து வரும் 'மெட்ராஸ் ஐ' - சுயமருத்துவம் செய்யாதீர்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை

இக்கண் தொற்றுள்ள நோயாளிகள், அவர்களது கண்களிலிருந்து வரும் திரவ வெளியேற்றத்தைத் துடைக்க பேப்பர் நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் அவ்வாறு பயன்படுத்திய நாப்கின்களை உடனடியாக பத்திரமாக அகற்றிவிட வேண்டும். தொற்று ஏற்படும்போது பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு அவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணியவேண்டும்.

வழக்கமாக பயன்படுத்துகின்ற, திரும்பத்திரும்ப பயன்படுத்தக்கூடிய கைக்குட்டைகளை இந்நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது. தங்களது கைகளை இவர்கள் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் தொற்றுப் பரவாமல் தடுக்க, தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருட்களை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்"

ABOUT THE AUTHOR

...view details